30ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தையும் அதற்கு அடுத்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும் இலங்கை அரசு எப்படி ஏமாற்றியது என்பதையும் அதற்கு அரசுகள் என்ற தளத்தில் இருந்துகொண்டு சர்வதேச நாடுகள் எவ்வாறு காரணமாக இருந்தன என்பதையும் ஜனநாயக வழியில் வெளிப்படுத்த வேண்டிய காலமிது.
தேசிய விடுதலை வேண்டி நிற்கும் சமூகம் ஒன்று மதங்களைக் கடந்து போராட்டத்தில் நம்பிக்கை வைக்கும். அந்தப் போராட்டம் ஆயுத வழியாகவும் இருக்கலாம் அஹிம்சை மூலமாகவும் அமையலாம். எந்தவகையானதாக இருந்தாலும் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் கட்சி ஒன்றிடம் அல்லது விடுதலை இயக்கத்திடம் அந்த சமூகம் மாற்றங்களை எதிர்ப்பார்க்கும். அதற்கான பங்களிப்பையும் அந்த சமூகம் வழங்கும்.
எவ்வாறான பங்களிப்பு
ஆனால் இங்கு தமிழ்ச் சமூகத்தை எடுத்துக் கொண்டால் ஆயுதப் போராட்டத்தில் பங்களிப்பு என்பதை மனதளவில் செய்யவில்லை. எனினும் கட்டாயங்களின் அடிப்படையில் அல்லது விரும்பியோ விரும்பமலே அந்த பங்களிப்பு அமைந்தது. இருந்தாலும் 1980க்கு முன்னர் இடம்பெற்ற அஹிம்சைப் போராட்டகாலத்தில் மக்களிடத்தில் காணப்பட்ட உணர்ச்சிப்போக்கு ஆயுதப் போராட்டத்திற்கு ஒரு வகையான எழுச்சியை கொடுத்தது என்றும் சொல்லாம்.
அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளுக்கு அவ்வாறான உணர்ச்சியுடன் கூடிய ஆதரவுத் தளம் ஒன்று இருந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்கு பின்னரான சூழலில் அந்தப் போராட்டம் பற்றிய உணர்வுகளுக்கு மக்கள் மதிப்புக் கொடுத்தாலும் அமெரிக்கா, நேர்வே, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் புலிகளைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் விரும்பவில்லை.
தேசியத்தின் பிளவு
ஏனெனில் தமிழர்களின் அரசியல் போராட்டம் என்பது 1920இல் இலங்கைத் தேசியத்தின் பிளவுடன் ஆரம்பிக்கப்பட்டது. இடையில் 30 ஆண்டுகள் மாத்திரமே ஆயுதப் போராட்டம். அதுவும் 2009ஆம் ஆண்டு மே மாதத்துடன் அழிக்கப்பட்டு மௌனிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க, ஜப்பான், நோர்வே போன்ற நாடுகள் எதற்காக புலிகள் பற்றியும் அவர்கள் விட்ட தவறுகள் குறித்தும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி காலத்தை வீணாக்கிக் கொண்டிருக்கின்றன என்பது இங்கு கேள்வியாகும்.
புலிகளின் அழிவோடு தொடர்ச்சியாக தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைக் கோரிக்கைக்கு தீர்வு ஒன்றை வழங்க வேண்டும் என ஏன் அந்த நாடுகள் இலங்கை அரசுக்கு கடும் அழுத்தத்தை கொடுக்க முடியாமல் உள்ளது? புலிகளின் அழிவுடன் ஏன் அந்த நாடுகளும் ஒழிந்துகொண்டன? ஜெனீவா மனித உரிமைச் சபையில் தமிழர் சார்பாக காண்பிக்கப்பட்ட சில சலசலப்புகள் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்பதற்கு என்று குழந்தைப் பிள்ளைக்கும் தெரியும்.
நல்லாட்சியின் நிலைமை
மேற்படி நாடுகளின் ஆதரவுடன் ரணில் மைத்திரி நல்லாட்சி பதவியேற்று இரண்டு ஆண்டுகளின் பின்னரும் வடக்கு கிழக்கில் அதேநிலைதான் என்று மேற்படி அந்த நாடுகளுக்கும் தெரியும். ஆனால் அந்த நாடுகளினால் நல்லாட்சியை தட்டிக்கேட்க முடிந்ததா? இல்லை. அப்படியானால் புலிகள் பற்றியும் அவர்கள் விட்ட தவறுகள் குறித்தும் அவ்வப்போது ஏன் பேச வேண்டும்? அப்படி பேசுவதன் உள்நோக்கம் என்ன? பிரபாகரனை மக்கள் கடவுளாக, இரட்சகராக நேசித்தனர் என்று எரிக்சொல்கெய்ம் கூறுகின்றார்.
போராட்ட தலைவன் ஒருவனை மக்களில் சிலர் கடவுளாக பார்க்கலாம் கடவுளாக கருதாமலும் விடலாம். அது அந்த மக்களின் உரிமை. ஆனால் 2009இற்கு பின்னர் பிரச்சினை அதுவல்ல. சமாதான தூதுவர் என்று கூறிக் கொண்டு 2002இல் வன்னிக்குள் நுழைந்த சொல்கெய்ம் புலிகளின் அழிவுடன் இனப்பிரச்சினையும் முடிந்து விட்டது என்று கருதினாரா? சிங்கள அரசியல் தலைவர்கள் அப்படித்தான் சொல்லுகின்றனர். உண்மையில் தமிழர் நலனில் அக்கறை கொண்டு எரிக்சொல்கெய்ம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருந்தால் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் அவர் இலங்கை அரசுடன் பேசியிருக்க வேண்டும்.
ஏரிக்சொல்கெய்ம் கூறியது என்ன?
ஆனால் சொல்கெய்ம் குறிப்பாக அவர்சார்ந்த நோர்வே மற்றும் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் மென்போக்குடன் இலங்கை அரசுடன் உறவாடுகின்றன. ஆனால் புலிகள் விட்ட தவறுகளை பெரிதாக்கி தமிழர்கள் பாடம் கற்க வேண்டும் என்றும் அறிவுரைவேறு கூறுகின்றனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை புலிகளைப் பற்றியோ அல்லது மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பிப்பது குறித்தோ சிந்திக்கும் நிலையில் இல்லை.
முன்னாள் போராளிகளைக் கூட சமூகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத அவலத்தில் தமிழச் சமூகம் உள்ளது. இந்த நிலையில் புலிகள் பற்றி மீண்டும் மீண்டும் பேசி வடக்கு கிழக்கு பிரதேசத்தை அச்சுறுத்தல் நிலைமைக்குள் வைத்திருக்க இந்த நாடுகள் விரும்புகின்றதா என்பது மற்றுமொரு கேள்வியாகும். எதுவும் அறியாத அரசியல் கைதிகளின் விடுதலை குறித்துக் கூட நோர்வே எதுவும் பேசவில்லை.
70ஆண்டுகால போராட்டம்
தமிழ் மக்கள் ஆயுதப் போராட்டத்தின் தியாகங்களை மதிக்கின்றனர். அந்த பயங்கர உயிரழிவுகள் பற்றி மக்கள் மறக்கவில்லை. ஆனால் அவ்வாறு மதிக்கப்படும் போராட்டத்தையும் அதன் இயக்கத்தையும் உயர்வாக பேசுவதாக கருதி 70 ஆண்டுக்கு மேற்பட்ட அரசியல் உரிமைக் கோரிக்கையை மட்டம் தட்டும் நிலைக்கு மேற்படி நாடுகளின் புலிகள் பற்றிய பேச்சுக்கள் இட்டுச் செல்கின்றன. அதேவேளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் பலரும் புலிகள் பற்றியே மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருப்பதால் இனப்பிரச்சினைத் தீர்வின் அடுத்த கட்டத்திற்குள் நகரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
புலிகளின் ஆயுதப் போராட்டம் என்பது ஒரு மைல்கல். ஆகவே அதன் தொடர்ச்சியாக அந்தப் போராட்டத்தை நியாயப்படுத்தக் கூடிய செயற்பாடுகளை மாற்றியமைப்பதுதான் தற்போதைய பிரதான கடமை. மேற்படி நாடுகளின் இலங்கை தொடர்பான வெளியுறவுக் கொள்கையில் கூட மாற்றங்களை ஏற்படுத்த புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்பு செய்ய முடியும். ஆனால் தமிழர்களின் அரசியல் போராட்டத்தை புலிகளின் 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தி பேசினால் அவ்வாறான மாற்றங்களை உருவாக்க முடியாது. 70ஆண்டுகால போராட்ட வரலாறு என்பதற்கான நியாயங்களை முன்வைக்க வேண்டிய காலமிது.
அத்துடன் 30ஆண்டுகால அஹிம்சைப் போராட்டத்தையும் அதற்கு அடுத்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தையும் இலங்கை அரசு எப்படி ஏமாற்றியது என்பதையும் அதற்கு அரசுகள் என்ற தளத்தில் இருந்துகொண்டு சர்வதேச நாடுகள் எவ்வாறு காரணமாக இருந்தன என்பதையும் ஜனநாயக வழியில் வெளிப்படுத்த வேண்டிய நேரமிது.