169
மயிலிட்டி துறை முகத்திற்கு பருத்தித்துறையில் இருந்து பொது மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக பருத்தித்துறை – பொன்னாலை வீதியினை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்க இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கடந்த 27 வருட காலமாக இருந்த மயிலிட்டி துறை முகம் கடந்த மாதம் மக்கள் பாவனைக்கு இராணுவத்தினர் அனுமதித்தனர்.
அந்நிலையில் பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் இருப்பதனால் , மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து பருத்தித்துறை பகுதியில் வசிக்கும் மக்கள் சுமார் 42 கிலோ மீற்றர் தூரத்தை சுற்றியே கடக்க வேண்டிய நிலை தற்போது காணப்படுகின்றது.
அதனால் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் 4 கிலோ மீற்றர் தூர வீதியினை மக்கள் பாவனைக்கு அனுமதிக்குமாறு இராணுவ தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
அந்த நிலையில் தற்போது இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துக்களில் இராணுவ பாதுகாப்புடன் , இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 4 கிலோமீற்றர் தூரத்திற்கு மக்கள் பயணிக்க இராணுவ தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் , அது தொடர்பில் மேலதிகமாக ஆராய்வதற்கு , இராணுவ தரப்பினருடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை யாழ்.மாவட்ட செயலகத்தில் கலந்துரையாட உள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
Spread the love