197
சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் உள்ளது என்பது இந்த நீதிமன்றில் கூறும் போது தான் எனக்கு தெரியும் என மாணவி கொலை வழக்கின் 9ஆவது எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் நீதாய விளக்கம் முன்பாக தெரிவித்தார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்.நீதிமன்ற கட்டட தொகுதியின் இரண்டாம் மாடியில் மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகள் அன்னலிங்கம் பிரேமசங்கர் மற்றும் மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் நீதாய விளக்கம் ( ரயலட் பார் ) முறைமையில் நடைபெற்றது.
சட்டத்தரணிகள் முன்னிலை.
வழக்கு தொடுனர் தரப்பில் இன்றைய வழக்கு விசாரணைகளின் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் தலைமையில் அரச சட்டவாதிகளான நாகரத்தினம் நிஷாந்த், முஸ்லி மற்றும் சட்டத்தரணி மாதினி விக்னேஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர்.
எதிரிகள் தரப்பில் 1ம் ,2ம் , 3ம் , 6ம் மற்றும் 8ஆம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன , மற்றும் சட்டத்தரணி லியகே ஆகியோரும் 5ம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதியும் 4ம், 7ம் , மற்றும் 9ம் எதிரிகள் சார்பில் சட்டத்தரணி சின்னராசா கேதீஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகி இருந்தனர். அத்துடன் ஒன்று தொடக்கம் 9 வரையிலான எதிரிகள் சார்பில் நியமிக்கப்பட்ட சட்டத்தரணி விக்னேஸ்வரன் ஜெயந்தாவும் முன்னிலை ஆகி இருந்தார்.
எதிரிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
எதிரிகளான பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம்
ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக் குமார் , மகாலிங்கம் சசிதரன் , தில்லைநாதன் சந்திரகாசன் , சிவதேவன் துஷாந்த் , பழனி ரூபசிங்கம் குகநாதன் , ஜெயதரன் கோகிலன் , மற்றும் மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஒன்பது எதிரிகளும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்றைய தின சாட்சி பதிவுகள் ஆரம்பமானது.
13ஆம் திகதி கொழும்பில் நின்றேன்.
வழக்கின் ஏழாவது எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதன் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கையில் ,
நான் கொழும்பு மோதரை பகுதியில் வசிக்கின்றேன். இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டியமை , குற்றத்திற்கு உடந்தையாக இருந்தமை என என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவற்றை நான் மறுக்கிறேன்.
இந்த வழக்கில் எனக்கு எதிராக எந்த சான்று பொருட்களும் , சாட்சியங்களும் இல்லை. குற்ற சம்பவம் நடைபெற்ற கால பகுதியான 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி நான் கொழும்பில் நின்றேன் என மதுபான சாலை ஊழியர் மற்றும் வெள்ளவத்தை லொட்ஜ் உரிமையாளர் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.
மாணவியின் அண்ணா எனது நண்பன்.
நான் கொழும்பில் கடை ஒன்றில் வேலை செய்கிறேன். படுகொலை செய்யப்பட்ட மாணவியின் ஒன்று விட்ட அண்ணா காண்டீபன் என்பவர் கொழும்பில் முச்சக்கர வண்டி ஓடுபவர். அவர் எனது நண்பன். அவருக்காகவே மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 15ஆம் திகதி புங்குடுதீவு வந்தேன். உயிரிழந்த மாணவியை எனக்கு தெரியாது. நான் அவரை நேரில் கண்டதே இல்லை. காண்டீபனின் தங்கை என்பதானால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்தேன். அத்துடன் புங்குடுதீவில் உள்ள எமது கோயிலில் 17ஆம் திகதி பூஜை இருப்பதனால் அதில் கலந்து கொள்ளும் நோக்குடனும் எனது அம்மாவையும் அன்றைய தினம் கொழும்பில் இருந்து அழைத்து வந்திருந்தேன்.
கோயில் தேருக்கு சென்றோம்.
17ஆம் திகதி புளியங்கூடல் பிள்ளையார் கோவில் தேருக்கு சென்று விட்டு வந்த போதே எம்மை போலீசார் கைது செய்தனர். கைது செய்து எம்மை குறிகட்டுவான் பொலிஸ் காவலரணுக்கு அழைத்து சென்று , காவலரணுக்கு பின்னால் உள்ள ஆல மரம் ஒன்றில் எனது கைகள் இரண்டையும் பின்புறமாக கட்டி பத்தடி உயரத்திற்கு தூக்கி கட்டி விட்டு அடித்து சித்தரவதை புரிந்தார்கள்.
சித்திரவதை செய்தனர்.
அதன் போது 18 கேள்விகள் இருக்கின்றன. அதற்கு பதில் சொல் என கேட்டார்கள். நான் சம்மதித்து அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொன்னேன். திரும்பவும் என்னை மேலே தூக்கி கட்டி விட்டு தாக்கினார்கள். பிறகு மீள இறக்கி விட்டு அதே கேள்வியை திரும்ப கேட்டார்கள் நான் ஒரே பதிலையே திரும்பவும் சொன்னேன்.
பின்னர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு எம்மை அழைத்து வந்து 18ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரி முன் முற்படுத்தினார்கள். அதேபோல 19ஆம் திகதியும் சட்ட வைத்திய அதிகாரி முன்பாக முற்படுத்தினார்கள். பின்னர் நீதவான் முன்னிலையில் முற்படுத்தி நீதவானின் உத்தரவின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டோம்.
அண்ணாவுடன் சேர்ந்து மது அருந்துவதில்லை.
எனக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு ஆனால் அண்ணாமாருடன் சேர்ந்து குடிப்பதில்லை. எனது சித்தப்பாவின் மகன்மாரே மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ் குமார்) மற்றும் மகாலிங்கம் சசீந்திரன் ஆகியோர்.
எனது அண்ணாவான சசிக்குமார் சுவிஸ் நாட்டில் இருந்து வந்திருந்தார். அவர் 2012ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் வருடத்திற்கு ஒரு முறை இலங்கை வந்து செல்வார். எங்கள் ஊரில் உள்ள கண்ணகி அம்மன் ஆலய திருவுழாவுக்காக அவ்வாறே 2015ஆம் ஆண்டு இலங்கை வந்தார்.
நாம் எந்த திட்டமும் போடவில்லை.
வரும் போது எந்த திட்டத்துடனும் வரவில்லை. மாணவியை கடத்தி , வன்புணர்ந்து கொலை செய்யும் எந்த திட்டமும் எம்மிடம் இருக்கவில்லை. அது எம் மீது சுமத்தப்பட்ட பொய்யான குற்ற சாட்டு.
புங்குடுதீவில் குற்ற செயல் நடைபெறுவதற்கு முதல் நாள் 12ஆம் திகதி எம்மை வானில் கண்டதாக இலங்கேஸ்வரன் என்பவர் சாட்சியம் அளித்து இருந்தார். அது பொய் நாம் 12ஆம் திகதி கொழும்பில் நின்றோம்.
குற்ற புலனாய்வு துறையினரிடம் 2015ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை என்ன செய்தேன் எங்கே போனேன் என சகல தரவுகளையும் வாக்கு மூலத்தில் வழங்கி இருந்தேன். என சாட்சியம் அளித்தார்.
அதன் போது மன்று ,
கேள்வி :- 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் என்ன செய்தீர் என வாக்கு மூலத்தில் கூறினீரா ?
பதில் :- ஆம்.
கேள்வி :- நீர் குற்ற புலனாய்வு துறையினரிடம் வழங்கிய வாக்கு மூலம் மூல வழக்கேட்டில் இணைக்கப்பட்டு உள்ளது. அதில் 13ஆம் திகதி என்ன செய்தீர் என அனைத்து தகவலும் உண்டு. அது ஏன் குற்ற சம்பவம் நடைபெற்ற 13ஆம் திகதியை மாத்திரம் குறிப்பிட்டு அனைத்து தகவல்களையும் வழங்கினீர் ?
பதில் :- நான் 8ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையான சகல தகவல்களையும் வழங்கினேன். அந்த தகவல்களை வாக்கு மூலமாக பதியவில்லை. அது ஏன் என எனக்கு தெரியாது.
என பதிலளித்தார். அதை தொடர்ந்து 7ஆவது எதிரியின் சாட்சிபதிவுகள் முடிவுறுத்தப்பட்டது.
மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள புங்குடுதீவு வந்தேன்.
அதனை தொடர்ந்து 8ஆவது எதிரியான ஜெயதரன் கோகிலன் சாட்சி கூண்டில் ஏறி சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கையில் ,
நான் கொழும்பில் வசிக்கிறேன். இணையத்தள வடிவமைப்பு உள்ளிட்ட கணணி சார் வேலைகளை செய்து வந்தேன். நான் கொழும்பில் இருந்து மாணவியின் இறுதி சடங்குக்காக 15ஆம் திகதி புங்குடுதீவுக்கு வந்திருந்தேன். 17ஆம் திகதி புளியங்கூடல் ஆலய தேர் திருவிழாவுக்கு போட்டு வேட்டியுடன் வாகனத்தில் இருந்த போதே எம்மை சிவில் உடையில் வந்த நான்கு போலீசார் என்னையும் , என்னுடன் சசீந்திரன் , சந்திரஹாசன் , குகநாதன் துஷாந்த் ஆகியோரை கைது செய்தனர்.
எம்மை கைது செய்து மதியம் 2.30 மணியளவில் குறிகட்டுவான் பொலிஸ் காவலரனுக்கு கொண்டு சென்றனர். அங்கு என்னை கதிரையில் இருத்திவிட்டு , சந்திரஹாசனையும் , துஷாந்தையும் , கோபி எனும் பொலிஸ் கான்ஸ்டபிளும் , இரான் எனும் உப பொலிஸ் பரிசோதகரும் காவலரணுக்கு பின் புறமாக உள்ள பற்றை காட்டுக்குள் இழுத்து சென்றனர்.
45 நிமிடம் அடித்து துன்புறுத்தினார்கள்.
அதன் பின்னர் சந்திரஹாசன் , துஷாந்த் கத்தும் சத்தம் கேட்டது. 45 நிமிடங்களுக்கு பின்னர் இரு பொலிசாரும் என்னிடம் வந்து என்னையும் அந்த பற்றை காட்டுக்குள் இழுத்து சென்று கடுமையான பாரதூரமான சித்திரவதைகளை புரிந்தனர்.
எமக்கு பவுடர் பூசி வீடியோ எடுத்தார்கள்.
பின்னர் எம்மை மீண்டும் காவலரணுக்கு அழைத்து வந்து எம்மை வீடியோ எடுத்தனர். அப்போது அவர்கள் புரிந்த சித்திரவதையால் எனது முகத்தில் இருந்து இரத்தம் வந்து கொண்டிருந்தது. அதனை கழுவ சொல்லி எனது முகத்திற்கு பவுடர் பூச சொன்னார்கள். அதன் பின்னர் என்னை வீடியோ எடுத்தார்கள்.
சித்திரவதை தாங்க முடியாமல் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தேன்.
நான் தான் மாணவியை கடத்தி வன்புணர்ந்து படுகொலை செய்தேன் என வாக்கு மூலம் அளிக்க சொல்லி துன்புறுத்தினார்கள். நான் வலி தாங்காமல் ஒப்புக்கொண்டேன்.
எனக்காக வாதாட சட்டத்தரணிகள் எவரும் இல்லை.
எனக்கு நடந்த சித்திரவதைகள் துன்புறுத்தல்கள் தொடர்பில் என்னால் இதற்கு முதல் நீதிமன்றங்களில் கூற முடியவில்லை. அதற்கான சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. எனக்காக நீதவான் நீதிமன்றிலோ அல்லது மேல் நீதிமன்றிலோ சட்டத்தரணிகள் எவரும் முன்னிலை ஆகவில்லை.
இலங்கேஸ்வரன் சொன்னது பொய்
12ஆம் திகதி இலங்கேஸ்வரன் என்னை புங்குடுதீவில் கண்டேன் என சொன்னது பொய் நான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றேன்.
மாணவி கடத்தி வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இந்த குற்றத்திற்கு உடந்தையாக எப்போதும் இருந்ததில்லை. என் மீதான குற்ற சாட்டுகள் அனைத்தையும் மறுக்கிறேன்.
என் மீது பொய் குற்ற சாட்டு சாட்டப்பட்டதனால் இன்று எனது குடும்பமே சீரழிந்து காணப்படுகின்றது. நான் சசிக்குமருடன் (சுவிஸ் குமார்) சேர்ந்து எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை. 12ஆம் திகதி கொழும்பில் நின்றேன். அன்றைய தினம் நெட் கபே ஒன்றுக்கு சென்று எனது மின்னஞ்சலை பார்த்தேன்.
கைது செய்யும் போது சுமத்திய குற்றசாட்டு வேறு.
தற்போது சுமத்தப்பட்டு உள்ள குற்ற சாட்டு வேறு.
ஊர்காவற்துறை போலீசார் என் மீது சுமத்திய குற்ற சாட்டு மாணவியை கடத்தி வன்புணர்ந்து படுகொலை செய்தேன். என ஆனால் தற்போது அந்த குற்றங்களை நான் செய்வில்லை. அந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது மாறும் சதித்திட்டம் தீட்டியது என என் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. என் மீதான அனைத்து குற்ற சாட்டுக்களையும் நான் முற்றாக மறுக்கிறேன்.என சாட்சியம் அளித்தார்.
அதனை அடுத்து 8ஆவது எதிரியின் சாட்சி பதிவுகள் முடிவுறுத்தப்பட்டது.
சுவிஸில் இருந்து விடுமுறையை கழிக்கவே இலங்கை வந்தேன்.
தொடர்ந்து 9ஆவது எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார்.
அதன் போது,
நான் சுவிஸ் நாட்டில் சமையல் வேலை செய்து வந்தேன். நான் 2015ஆம் ஆண்டு விடுமுறைக்கு வந்த போது மாணவி கொலை வழக்குடன் தொடர்புடையவன் என கைது செய்தனர்.
என் மீது மாணவி கொலை வழக்கில் சதித்திட்டம் தீட்டியமை குற்றத்திற்கு உடந்தையாக செயற்பட்டமை , குற்றத்திக்கு பங்களித்தமை போன்ற குற்ற சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளது. அவை அனைத்தையும் நான் முற்றாக மறுக்கிறேன்.
சிறையில் பழக்கம்.
எனக்கு எதிராக சாட்சியம் அளித்த இப்லான் என்பவரை வவுனியா சிறைச்சாலையில் தான் பழக்கம் அவரும் சக கைதி எனும் அடிப்படையில் , அதற்கு முன்னர் அவரை எனக்கு தெரியாது.
வவுனியா சிறைச்சாலையில் என்னிடம் மாணவி கொலை வழக்கு தொடர்பில் குற்ற புலனாய்வு துறை அதிகாரி நிஷாந்த சில்வா விசாரணை செய்து கொண்டு இருந்த வேளை இப்லான் நிஷாந்த சில்வாவிடம் பை (Bag) ஒன்றினை வாங்கி சென்று இருந்தார்.
விசாரணை முடிந்து நான் மீண்டும் சிறைக்கூடத்திற்கு சென்ற போது , தனக்கு நிஷாந்த சில்வாவுடன் பழக்கம் உண்டு எனவும் ஏதேனும் உதவி தேவையா என என்னிடம் இப்லான் கேட்டார். அதற்கு நான் எனக்கு எந்த உதவியும் தேவையில்லை என்றேன்.
25 இலட்சம் பணம் கேட்டார்.
பின்னர் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்ட இப்லான் மீண்டும் ஒரு மாத காலம் கழித்து வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது அவர் என்னிடம் மாணவி கொலை வழக்கில் இருந்து விடுவித்தது விடலாம் 25 இலட்சம் ரூபாய் பணம் தருமாறு கேட்டார். செய்யாத குற்றத்திற்காக பணம் தர முடியாது என நான் மறுத்தேன். அதன் போது எமக்கு இருவருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு நான் அவரை தள்ளி விட்டேன். அதற்கு அந்த நேரம் எங்கள் கூட சிறை கூடத்தில் இருந்த சக கைதிகள் சாட்சி. ஆனால் அவர்கள் அனைவரும் தற்போது விடுதலை ஆகி சென்று உள்ளதால் அவர்களை சாட்சியமாக அழைக்க முடியாது.
வழக்கில் இருந்து விடுவிக்க 2 கோடி ரூபாய் கேட்டனர்.
பின்னர் மீண்டும் இப்லான் என்னிடம் மாணவி கொலை வழக்கில் இருந்து முற்றாக விடுவித்து விடலாம் அதற்கு 2 கோடி ரூபாய் தருமாறும் , அதில் முதல் கட்டமாக முற்பணமாக 25 இலட்சம் ரூபாய் தருமாறு கோரினார். நான் அதற்கு சம்மதிக்க வில்லை. இப்லானுக்கு அந்த நேரம் பணம் தேவைப்பட்டது. பணம் இல்லை எனில் அவர் நீதிமன்றினால் தண்டனைக்கு உள்ளாக வேண்டி வரும் எனவே என்னிடம் பணத்தை பெற முனைந்தார்.
சக கைதிக்கு எதிராக முறைப்பாடு செய்ய விரும்பவில்லை.
என்னிடம் இப்லான் பணம் கேட்டு மிரட்டியது தொடர்பில் நான் சிறைச்சாலை அத்தியட்சகரிடமோ அல்லது , நீதிமன்றிலோ முறையிட்டு இருக்காலம் ஆனால் என்னுடன் உள்ள சக கைதியை நான் காட்டி கொடுக்க விரும்பவில்லை. அதனால் அது தொடர்பில் எந்த முறைப்பாடும் எவரிடமும் தெரிவிக்கவில்லை.
ஆசிய பெண்ணை கடத்தும் திட்டம் இருக்கவில்லை.
அவரிடம் நான் ஆசிய பெண் ஒருவரை கடத்தி வன்புணர்ந்து படுகொலை செய்வதை நேரடியாக வீடியோ எடுத்தோம் என நான் இப்லானிடம் எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை.
எனது மச்சானும் ஆறாம் எதிரியுமான சிவதேவன் துசாந் எனக்கு தொலைபேசியில் பெண் பிள்ளையின் படம் அனுப்பவும் இல்லை நான் அவரிடம் படம் அனுப்பு என கேட்கவும் இல்லை. அதேபோன்று எந்த சந்தர்ப்பத்திலும் நிஷாந்த சில்வாவிற்கோ அல்லது வேறு விசாரணை அதிகாரிகளுக்கோ நான் பணம் கொடுக்க முற்படவில்லை. இப்லானுக்கு கொலை மிரட்டல் விடுக்கவும் இல்லை.
இலங்கேஸ்வரன் என்பவர் 12ஆம் திகதி என்னை ஆலடி சந்தியில் வானில் கண்டேன் என சொன்னது பொய். நான் 12ஆம் திகதி கொழும்பில் நின்றேன்.
சுவிஸில் திருமணம் முடித்தேன்.
நான் 1988ஆம் ஆண்டு சுவிஸ் நாட்டுக்கு சென்று விட்டேன். 1998ஆம் ஆண்டு அங்கு திருமணம் முடித்தேன். இரண்டு பிள்ளைகள் உள்ளன.பின்னர் நான் சட்ட ரீதியாக எனது திருமண பந்தத்தை முறித்துக்கொண்டேன்.
புங்குடுதீவிலும் திருமணம் முடித்தேன்.
2012ஆம் ஆண்டு புங்குடுதீவை சேர்ந்த பெண்ணை திருமணம் முடித்தேன். சுவிஸ் நாட்டில் இருந்து வருடத்திற்கு ஒரு முறை இலங்கைக்கு வருவேன். அவ்வாறே 2015ஆம் ஆண்டு 4ஆம் மாதம் இலங்கை வந்தேன்.
மீண்டும் 5ஆம் மாதம் 6ஆம் திகதி சுவிஸ் நாட்டுக்கு செல்ல வேண்டும் விமானத்தை தவற விட்டமையால் கொழும்பில் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை தங்கி இருந்தேன்.
மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொண்டோம்.
மாணவியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள 15ஆம் திகதி புங்குடுதீவு வந்தோம். 17 ஆம் திகதி புளியங்கூடல் பிள்ளையார் கோவில் தேருக்கு சென்று இருந்தோம். நான் கோயிலினுள் இருந்த போது எனது நண்பனின் தொலைபேசிக்கு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் அழைப்பை ஏற்படுத்தி என்னுடன் கதைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு நண்பன் நான் கோயிலினுள் இருப்பதாகவும் வந்தவுடன் கூறுவதாகவும் கூறியுள்ளான்.
ஸ்ரீகஜன் கதைத்தார்.
நான் கோயிலால் வந்த உடன் ஸ்ரீகஜன் கதைக்க சொன்ன விடயத்தை நண்பன் சொன்னான். நான் தொலைபேசியில் அவருடன் கதைத்தேன். அப்போது என்னிடம் சிறிய விசாரணை செய்ய வேண்டும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினார். நான் நீங்கள் எங்கே நிற்கிறீங்க என கேட்டேன். அதற்கு அவர் தான் புங்குடுதீவில் நிற்பதாக சொன்னார். நான் அங்கே வருவதாக கூறி ஸ்ரீகஜன் சொன்ன இடத்திற்கு சென்றேன்.
போகும் வழியில் சந்திரஹாசனின் வீடு இருந்ததால் அவரையும் அழைத்து சென்றோம். ஸ்ரீகஜன் எம்மை வர சொன்ன இடம் மாணவியின் வீட்டுக்கு பின்புறமாக சற்று தொலைவில் உள்ள தபால் நிலையத்திற்கு , அங்கு சென்ற போது என்னுடன் வந்தவர்கள் வானில் இருந்தார்கள்.
எனது சகோதரர் மற்றும் நண்பர்களை கைது செய்தனர்.
அவ்வேளை அங்கு வந்த ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கோபி என்பவரும் மேலும் நால்வரும் வந்து என்னுடன் வந்து வானில் இருந்தவர்களை கைது செய்தனர். அப்போது ஸ்ரீகஜனிடம் நான் கேட்டேன் ஏன் கைது செய்கிறார்கள் என அதற்கு அவர் எனக்கு தெரியாது நான் உன்னை தான் வர சொன்னனான் அவங்களை கைது செய்வது தொடர்பில் கைது செய்கிரவங்களை கேள் என சொன்னார். ஸ்ரீகஜன் என்னிடம் விசாரணை செய்யும் போது சிவில் உடையில் தான் இருந்தார்.
போல் தோழருடன் தொடர்பு கொண்டேன்.
பின்னர் 17ஆம் திகதி மாலை கைது செய்து கொண்டு என்ற எனது தம்பி உட்பட்டவர்கள் தான் மாணவி கொலை வழக்குடன் தொடர்புடையவர்கள் என ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. அதனை நான் கேட்டதும் போல் தோழர் என்பவருக்கு தொலைபேசி மூலம் அறிவித்தேன். தான் உடனே வருவதாக என்னிடம் கூறினார். பின்னர் தொலைபேசி எடுத்த போது அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை.
வேலணையில் மின் கம்பத்தில் கட்டி வைத்தார்கள்.
அதனால் நான் எனது நண்பனுடன் வாகனத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு செல்வோம் என சென்ற போது புங்குடுதீவு பாலம் முடிவடைந்த வேலணை பகுதியில் பொது மக்கள் நீ தானே மாணவி கொலை வழக்கில் கைது செய்யபப்ட்டு உள்ள சசியின் அண்ணா என கேட்டு தாக்கி என்னை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினார்கள்.
விஜயகலா காப்பற்றி விட்டார்.
அப்போது விஜயகலா என்பவர் அங்கு வாகனத்தில் வந்து இருந்தார். அக்கால பகுதியில் அவர் யார் என எனக்கு தெரியாது. அவர் வந்து மக்கள் என்னை அடிக்க விடாது தடுத்து எனது கட்டுக்களை அவிழ்த்து விடுமாறு கோரினார். நீயா சசியின் அண்ணா ? என என்னிடம் கேட்டார் நான் ஆம் என்றேன்.
பின்னர் பொதுமக்கள் என்னை அடிக்க விடாது தடுத்து நிறுத்தி எனக்கு மக்கள் அடிக்காமல் தடுப்பதற்காக இரண்டு மணி நேரம் அந்த இடத்தில் அவர் நின்றார். அப்போது அடிக்கடி தொலைபேசியில் யாருடனோ கதைத்துக்கொண்டு இருந்தார் . அன்று அவர் போலீசார் உடன் தான் கதைத்தார் என்பது எனக்கு இந்த மாதம் தான் பத்திரிகையில் செய்தி பார்த்து தெரிந்து கொண்டேன்.
இரண்டு வருடத்தின் பின்னர் வழக்கு எடுத்தால் ?
அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் 2015ஆம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பில் இரண்டு வருடத்திற்கு பின்னர் இப்பவா தெரிந்து கொண்டீர் என கேட்டார். இரண்டு வருடத்திற்கு முன்னர் நடந்த சம்பவம் தொடர்பில் இப்பதானே வழக்கு ஆரம்பித்து அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டு உள்ளது அதனால் எனக்கு இப்ப தான் தெரியும் என ஒன்பதாம் எதிரி பதிலளித்தார்.
விஜயகலா இரண்டு மணிநேரம் சம்பவ இடத்தில் நின்றார்.
மக்கள் இடம் இருந்து என்னை காப்பாற்றிய விஜயகலா என்னை எனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க முனைந்தார். அதற்காக அவர் அந்த இரவு நேரத்திலும் அந்த இடத்தில் இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் நின்றார். அப்போது வேலணையில் பஸ் ஓடுபவர்கள் புங்குடுதீவில் உள்ள எனது உறவினர்களுக்கு என்னை பிடித்து கட்டி வைத்து அடிப்பதை தெரிவித்து உள்ளனர்.
அதனால் புங்குடுதீவில் இருந்து என்னை அழைத்து செல்ல எனது மனைவி , அம்மா மற்றும் சில உறவினர்கள் பஸ்ஸில் வந்தார்கள் அப்போது இரவு 11 மணி இருக்கும். அந்த நேரம் விஜயகலா அங்கிருந்து சென்று விட்டார்.
யாழ்.பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஸ்ரீகஜன் வீட்டுக்கு வந்தார்.
பின்னர் மறுநாள் காலை எங்கள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள் வந்த ஸ்ரீகஜன் எனக்கு ஆபத்து எனவும் பத்து நிமிடத்தில் இங்கிருந்து வெளியேறினால் தன்னால் என்னை காப்பாற்ற முடியும் என மனைவியிடம் கூறி சென்றார்.
அவர் மீண்டும் பத்து நிமிடத்தில் வாகனம் ஒன்றில் வந்தார். என்னையும் , மனைவி தாய் மற்றும் மகள் ஆகியோரை வாகனத்தில் ஏற்றிகொண்டு யாழ்ப்பாணம் வந்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் எம்மை கதிரையில் இருத்தி வைத்து விட்டு ஸ்ரீகஜன் எங்கோ சென்று விட்டார். பின்னர் மாலை 5 மணிக்கே வந்தார். அப்போது நான் எங்களை இங்கே கூட்டி வந்து விட்டு போய் விட்டீர்கள் மனைவி பிள்ளை எல்லாம் பசியில் இருக்கின்றார்கள் என கூறினேன். அதற்கு அவர் தான் மறந்து விட்டதாகவும் , பொதுமக்கள் என்னை தாக்கியது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சொன்னார் நான் சாப்பிட்டு வந்து முறைப்பாடு செய்வதாக கூறி கண்டீனுக்கு சென்று சாப்பிட்டேன்.
மக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்தேன்.
பின்னர் வந்து என் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் போலீசில் முறைப்பாடு செய்தேன். பின்னர் எனக்கு போலீசார் முறைப்பாடு பதிவு செய்தமைக்கான துண்டும் வைத்திய சாலைக்கு செல்ல துண்டு ஒன்றும் தந்தனர்.
அந்த நேரம் தம்பியாட்களை பொலிஸ் நிலையம் கொண்டு வந்தாங்க அப்போது பொலிஸ் நிலையத்திற்கு வெளியில் பெறும் சன கூட்டம் காணப்பட்டது. இந்த நேரம் வெளியில் செல்வது ஆபத்து என கூறி பொலிசார் எம்மை தடுத்து வைத்திருந்தனர்.
இரவு கொழும்பு சென்றேன்.
பின்னர் இரவு என்னை வைத்திய சாலைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். அப்போது எனது படங்கள் முகநூலகளில் வந்ததால் நான் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு செல்வது ஆபத்து என கொழும்புக்கு சென்று சிகிச்சை எடுப்போம் என கொழும்பு சென்று விட்டேன்.
கொழும்பில் கைது செய்யப்பட்டேன்.
கொழும்பில் 19ஆம் திகதி காலை தங்கி இருந்த வேளை என்னை வெள்ளவத்தை போலீசார் கைது செய்தனர். அவர்கள் முதலில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு நான் மாணவி கொலை வழக்குடன் தொடர்புடையவனா என கேட்டார்கள் அவர்கள் இல்லை என கூறினார்கள். பின்னர் யாழ்ப்பான பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி ஊடாக கேட்டார்கள் அவர்களும் இல்லை என பதில் அளித்தார்கள்.
அதனால் என்னை மதியம் பதிவுகளை மேற்கொண்டு விட்டு விடுவிக்க இருந்த சமயம் கொடிகாம பொலிஸ் நிலையத்தில் இருந்து தொடர்பு கொண்டு நான் அவர்களுக்கு தேவை படுவதாகவும் என்னை விடுவிக்க வேண்டாம் எனவும் கூறினார்கள். அதனால் என்னை தொடர்ந்து வெள்ளவத்தை போலீசார் தடுத்து வைத்து இருந்தார்கள்.
யாழ்ப்பாணம் கொண்டு வரப்பட்டேன்.
பின்னர் அன்றைய தினம் 19ஆம் திகதி என்னை கொடிகாமம் போலீசார் வெள்ளவத்தை பொலிசாரிடம் இருந்து பாரம் எடுத்து யாழ்.நோக்கி வந்தார்கள்.
இடையில் அனுராதபுரத்தில் தமது வீட்டுக்கு சென்று குளித்து தேநீர் அருந்தி என்னை அழைத்து வந்தார்கள். இடையில் வவுனியா அல்லது கிளிநொச்சி பகுதி எது என எனக்கு சரியாக தெரியவில்லை அதில் ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி பாரிய முகாம் ஒன்றுக்கு பின்னல் என்னை அழைத்து சென்றார்கள்.
ஹெலியில் என்னை யாழ் அழைத்து வர முயற்சித்தனர்.
அங்கு பொலிஸ் விசேட அதிரடிப்படை , இராணுவம் நின்றனர் அத்துடன் ஹெலி இரண்டும் நின்றது. அங்கு இருந்த வரை படம் ஒன்றை சுட்டிக்காட்டி சிங்களத்தில் கதைத்துக்கொண்டு இருந்தனர். அப்போது தமிழ் தெரிந்த ஒருவர் எனக்கு சொன்னார். வீதியால் என்னை அழைத்து செல்வது பாதுகாப்பு இல்லை எனவும் அதனால் ஹெலியில் அழைத்து செல்ல உள்ளதாகவும் , ஆனாலும் ஹெலியை இறக்க கூடிய ஸ்ரேடியத்தடியும் பாதுக்காப்பு இல்லை என கதைப்பதாகவும் கூறினார்.
பின்னர் என்னை அங்கே தடுத்து வைத்து இருந்து விட்டு நள்ளிரவு கொடிகாம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார்கள். பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தர்கள்.
வாகன தொடரணி பாதுகாப்புடன் நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டேன்.
பின்னர் அங்கிருந்து 20 ஆம் திகதி என்னை ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்த அழைத்து சென்றார்கள். ஆங்கில படங்களில் வாறது போன்று பல வாகன தொடரனி பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அப்படி ஒரு பாதுகாப்பை நான் என் வாழ்நாளில் அதற்கு முதல் பார்த்ததில்லை. என தெரிவித்தார்.
வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை தெரியாது.
அதன் போது பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் , உங்களை அப்போதைய வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரா அழைத்து சென்றார் என கேட்டார். அதற்கு 9ஆம் எதிரி அவர் யார் என தெரியாது என்னை பல வாகன தொடரணி பாதுகாப்புடன் தான் அழைத்து சென்றனர். என தெரிவித்தார்.
சுவிஸ் நாட்டில் குடியுரிமை இல்லை.
இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை நான் சுவிஸ் நாட்டில் வசித்து வருகிறேன். எனக்கு அந்த நாட்டு குடியுரிமை கிடைக்கவில்லை. 5 வருடங்களுக்கு மேல் அந்த நாட்டில் தங்கி இருந்தால் தங்குமிட விசா தருவார்கள் அந்த விசாவில் தங்கி நின்றே வேலை செய்கிறேன்.
மாதாந்தம் 10 லட்சம் உழைப்பேன்.
நான் அங்கு சமையல் வேலை செய்வதனால் மாதாந்தம் இலங்கை ரூபாய் பெறுமதியில் 8 இலட்சம் சம்பளம் பெறுவேன், அத்துடன் பிற கொடுப்பனவுகள் என மாதாந்தம் இலங்கை ரூபாய் பெறுமதியில் 10 இலட்சம் சம்பாதிப்பேன். எனக்கு அங்கு மாதாந்தம் 6 இலட்சம் அளவிலையே செலவாகும்.
இலங்கை வந்து போக 20 இலட்சம் செலவு.
வருடத்திற்கு ஒரு முறை இலங்கை வந்து போவேன். அவ்வாறு வந்து போகும் போது 20 இலட்சம் ரூபாய் வரையில் செலவாகும்.
இந்த வழக்குக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாணவியை கடத்தி , வன்புணர்ந்து , கொலை செய்வதை நேரடி வீடியோ பதிவு செய்வதற்கு நான் எந்த சதித்திட்டமும் தீட்டவில்லை.
சுவிஸ் நாட்டில் மாபியா கும்பலா ?
சுவிஸ் நாட்டில் மாபியா கும்பல் இருக்கிறது எனும் விடயமே எனக்கு இந்த நீதிமன்றில் கூறும் போது தான் தெரியும். சுவிஸ் நாட்டில் மாபிய கும்பல் இருப்பதே எனக்கு தெரியாது. என் மீதான குற்ற சாட்டுகள் அனைத்தையும் நான் முற்றாக மறுக்கிறேன். என சாட்சியம் அளித்தார்.
எதிரி தரப்பு சார்பில் அழைக்கப்பட்ட சாட்சியங்கள் அணைக்கப்படவில்லை.
மாணவி கொலை வழக்கில் எதிரிகள் தரப்பு சாட்சிப்பதிவுகளுக்காக 5ஆம் எதிரி சார்பில் அழைக்கபட்ட சி.குகரூபன் எனும் சாட்சியத்தை அணைக்க வில்லை என 5ஆம் எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி மன்றில் விண்ணப்பம் செய்ததை அடுத்து மன்றினால் மன்றினால் குறித்த சாட்சி விடுவிக்கப்பட்டது.
அதேபோன்று வவுனியா சிறைச்சாலையில் இருந்து விளக்க மறியல் கைதியான எஸ்.தயாபரன் என்பவரை எதிரி தரப்பு சாட்சியத்திற்காக 9ஆம் எதிரி தரப்பில் அழைக்கப்பட்டவரை பின்னர் 9ஆம் எதிரி தரப்பு சட்டத்தரணி சாட்சியாக அணைக்கவில்லை என மன்றில் விண்ணப்பம் செய்ததை அடுத்து குறித்த சாட்சியம் மன்றினால் விடுவிக்கப்பட்டது.
சட்ட வைத்திய அதிகாரி சாட்சியம்.
அதேவேளை 5ஆம் எதிரி தரப்பில் சாட்சியத்திற்காக அழைக்கப்பட்ட சட்ட வைத்திய அதிகாரி உ. மயூரதன் இன்றைய தினம் சாட்சியம் அளித்தார்.
அதன் போது , 5ஆம் எதிரி தரப்பில் சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி சட்ட வைத்திய அதிகாரியிடம் , நீங்கள் 5ஆம் எதிரியை பரிசோதீத்தீர்களா ? என கேட்டார். அதற்கு சட்ட வைத்தியர் ஆம் என பதில் அளித்தார். அதன் போது அவரிடம் ஏதாவது கேட்டீரா ? என சட்டத்தரணி கேட்டார். ஆம். சாதரணமாக ஒருவரை பரிசோதிக்கும் போது வைத்தியர் என்ன கேட்பார்களோ என்ன கதைப்பார்களோ அதை செய்தேன். விசேடமாக எதனையும் அவரிடம் கேட்கவில்லை என சட்ட வைத்தியர் பதில் அளித்தார்.
அதனை அடுத்து தான் சட்ட வைத்திய அதிகாரியின் சாட்சியத்தை முடிவுறுத்துவதாக 5ஆம் எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்ததை அடுத்து குறித்த சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
சுவிஸ் குமாரின் மனைவி சாட்சியம்.
அதனை அடுத்து 9ஆம் எதிரி சார்பில் 9ஆம் எதிரியான சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமாரின் மனைவி மகாலக்சுமி சசிக்குமாரை 9ஆம் எதிரி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சி. கேதீஸ்வரன் சாட்சியம் அளிக்க அழைத்தார்.
தனது கணவனான சசிக்குமார் 2015ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையில் என்னுடன் கொழும்பில் ஒன்றாகவே தங்கி இருந்தார் என சாட்சியம் சசிக்குமாரின் மனைவி அளித்தார். அதனை தொடர்ந்து அவரது சாட்சியம் முடிவுறுத்தப்பட்டது.
மறுதலிப்பு சாட்சியமும் அணைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து 7ஆம் எதிரியினால் வழங்கப்பட்ட வாக்கு மூலம் முழுவதுமாக குற்ற புலனாய்வு துறையினர் பதியவில்லை. என மன்றில் தெரிவித்து இருந்தார். அதற்கு மறுதலிப்பு சாட்சியமாக குற்ற புலனாய்வு துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேராவை சாட்சியமாக அணைக்க பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குமார் இரட்ணம் மன்றில் விண்ணப்பம் செய்தார்.
அதனை மன்று ஏற்றுக்கொண்டது. அதன் போது குறித்த வழக்கின் 42ஆவது சாட்சியமாக சாட்சி அளித்த குற்ற புலனாய்வு துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் திசேரா சாட்சி கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார்.
அதன் போது , 7ஆம் எதிரியான பழனி ரூபசிங்கம் குகநாதனின் வாக்கு மூலத்தினை குற்றபுலனாய்வு திணைகள பொலிஸ் கான்ஸ்டபிள் கன்னங்கரா என்பவரே பெற்றார். அதில் 7ஆம் எதிரி 13ஆம் திகதி காலை முதல் இரவு வரை என்ன செய்தார் என சொல்லி உள்ளார். ஆனால் 12ஆம் திகதி தான் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வசிக்கும் கொழும்பு துறைமுகத்தில் வேலை செய்யும் பிரியன் என்பவரிடம் கைத்தொலைபேசியை அடகு வைத்து 15ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டேன் என்பதனை மாத்திரமே தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். வேறு எந்த தகவல்களையும் கூறவில்லை என சாட்சியம் அளித்தார்.
அதன் போது 7ஆம் எதிரிதரப்பு சட்டத்தரணி , எதிரி தரப்பில் நான் கூறுகிறேன். 7ஆம் எதிரி சொன்ன அனைத்து விடயத்தையும் நீங்கள் பதிவு செய்ய வில்லை என தெரிவித்தார்.
அதனை அடுத்து குறித்த சாட்சியத்தின் சாட்சி பதிவு முடிவுறுத்தப்பட்டது.
சாட்சியங்கள் முடிவுறுத்தப்பட்டன.
குறித்த வழக்கின் வழக்கு தொடுனர் தரப்பு மற்றும் எதிரிகள் தரப்பு சாட்சி பதிவுகள் இன்றைய தினத்துடன் முடிவுறுத்தப்பட்டது.
தொகுப்புரைக்காக திகதியிடப்பட்டது.
வழக்கு தொடுனர் மற்றும் எதிரி தரப்பு தொகுப்புரைக்காக எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதி திகதியிடப்பட்டு உள்ளது. அன்றைய தினம் வாய் மொழி மூலமாக இரு தரப்புக்களும் தமது தொகுப்புரைகளை மன்றில் வழங்க வேண்டும்.
மேலதிக சமர்ப்பணங்கள் செய்வதாயின் அதனை அன்றைய தினமே இரண்டு தரப்பினரும் எழுது மூலம் மன்றுக்கு வழங்க வேண்டும். எழுத்து மூலம் வழங்கப்படும் சமர்ப்பணம் மூன்று பிரதிகளாக மன்றில் வழங்கப்பட வேண்டும் என மன்று கட்டளையிட்டது.
9 எதிரிகளுக்கும் விளக்கமறியல்
அதனை தொடர்ந்து 9 எதிரிகளையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவு இட்டது.
மாத இறுதிக்குள் தீர்ப்பு.
அதேவேளை எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதி இரு தரப்பு தொகுப்புரைகளும் முடிவடைய தீர்ப்புக்கு மன்று திகதியிடும். அது பெரும்பாலும் அடுத்த மாத இறுதிக்குள்ளாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Spread the love