குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
2011ம் ஆண்டு உலக சம்பின்ஷிப் மெய்வல்லுனர் போட்டித் தொடரில் பங்கேற்ற 30 வீதமானவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியதனை ஒப்புக்கொண்டுள்ளனர். போட்டிகளில் பங்கேற்ற காலங்களில் ஏதேனும் ஓர் சந்தர்ப்பத்தில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து வகைகளை பயன்படுத்தியுள்ளதாக சுமார் 30 வீதத்திற்கும் அதிகமான மெய்வல்லுனர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக உலக ஊக்க மருந்து தடுப்பு முகவர் நிறுவனம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2011ம் ஆண்டு நடைபெற்ற பான் அராப் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற மெய்வல்லுனர்களில் 45 வீதமானவர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இரத்த மாதிரிகள் மற்றும் சிறுநீர் மாதிரிகள் ஊடாக ஊக்க மருந்து பயன்பாட்டை துல்லியமாக கண்டறிய முடியாது என ஹாவார்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஹரிசன் போப் தெரிவித்துள்ளார்.
ஏனெனில் ஊக்க மருந்து சோதனையின் போது எவ்வாறு பிடிபடாமல் இருக்க வேண்டும் என்பதனை வீர வீராங்கனைகள் நன்றாக அறிந்து வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஹவார்ட் மருத்துவ கல்லூரி மற்றும் ஜெர்மனியின் டியுபின்கன் பல்கலைக்கழகமும் கூட்டாக இணைந்து 2011ம் ஆண்டில் இந்த ஆய்வினை நடத்தியுள்ளது.