குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவுடன் இராணுவ உடன்படிக்கையை நீடிக்கக் கூடாது என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் இலங்கை செய்து கொண்டுள்ள ACSA (Acquisition and Cross-Services Agreement) உடன்படிக்கை நீடிக்கப்படக் கூடாது என ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு அமெரிக்கா இலங்கைக்கு உதவவில்லை எனவும் மாறாக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களையே இலங்கை மீது சுமத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டு அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவும், அப்போதைய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக்கும் இந்த இராணுவ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பத்து ஆண்டுகளில் இந்த உடன்படிக்கை காலாவதியாகவுள்ள நிலையில் மீளவும் உடன்படிக்கையை நீடிக்க முயற்சிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு உதவி தேவைப்படும் போது உதவிகளை வழங்கும் நோக்கிலேயே இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதாகவும் இதன் மூலம் இலங்கைக்கு எவ்வித நலனும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகின் ஏனைய நாடுகளுடனான யுத்தங்களினால் இலங்கைக்கு எவ்வித பலனும் கிடையாது என தெரிவித்துள்ள அவர் மிகவும் அவசியமான நிலைமையின் போது அமெரிக்கா இலங்கைக்கு உதவவில்லை எனவும், ஆயுதங்களை விற்பனை செய்ய மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான தற்போதைய உடன்படிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடப்படுவதனைத் தொடர்ந்து அதே விதமான வேறு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடன் இராணுவ உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் தார்மீக பொறுப்பு அரசாங்கத்திற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.