ரோஹிங்கா மக்களுக்கும் எமக்கும் – சேரன்:-
——————-
1.
என் குழந்தையைக் கை விட்டேன்
கடவுளே,
என்னை மன்னியும்
என உம்மை நான் கேட்க முடியாது
குழந்தையைக் கொல்வதற்கு மூன்று நிமிடங்களுக்கு
முன்னர்தான் என் கைகளை வெட்டினீர்கள்
வலியிலும் துயரிலும் ஓலத்திலும் உமக்குக்
கருணை எழாது.
என் குழந்தையின் வயிற்றில்
ஈட்டியை மென்மையாகச் செலுத்தியபோது
என்னை நோக்கி அவன் எறிந்த
இளிவரல் புன்னகை
அவர்கள் எல்லோருக்குமான கொடுஞ் சாபமாக
அங்கே இருக்கப் போகிறது
என்ற நினைப்பில்
நானும் போய்விட்டேன்.
2.
மெல்லிய ஊதா வண்ணத்தில்
போர்வை அணிந்திருந்த பிக்குணி
சூரியனுக்கு மன்னிக்கத் தெரியாது
என்று சொல்கிறாள்
அவளது பிச்சை ஓட்டுக்குள்
துண்டிக்கப்பட்ட குழந்தையின் கை
3.
றக்கைனில் இறங்கும் போது
நான் மியன்மாச் சாரம் கட்டியிருந்தேன்
நெற்றியில் குங்குமம். சந்தனம் கூட.
“இந்து”வாய் இருந்தால் சிக்கல் இல்லை என்றான்
அன்பன்
நண்பன்.
பௌத்தன்
வழிகாட்டி
உனது நிறம் இங்கு உவப்பானதல்ல
சிவப்புத் தோலும் இந்துச் சாயமும் இங்கே உய்ய வழி தரும்
என்றாலும் வா , பார்ப்போம்
என்று சொல்ல நடக்கிறோம்
கனடாவிலும் மண்ணிறத் தோலர்
இருக்கிறார்களா என்றார் தோழர்.
அடுத்த அடி எடுக்க முன்பு
வந்த பௌத்தக் கும்பலிடம்
நான் பங்களாதேசம் அல்ல என நிறுவ முடியாததால்
உயிர் தப்பி
நிறம் காத்து அடுத்த பறப்பில் திரும்பிச் சென்று
ஆங் சான் சூகிக்கு
ஒரு தாமரை மலரைப் பரிசளிக்கிறேன்.
4.
பசியில் அழுகிற குழந்தைக்கு
ஒரு பிடி சோற்றை( அல்லது ஒரு விசுக்கோத்தை)
உண்ணக் கொடுத்துவிட்டு
அதன் கழுத்தைத் துண்டித்தவனைக் கண்டதுண்டா
மியம்மாவில், ஈழத்தில், வியட்னாமில், கொங்கோவில், காஷ்மீரில்,யேமெனில்,பலஸ்தீனில், எல்சல்சவடோரில்…….