மும்பை மருத்துவமனையில் பணியாற்றிய 58 வயதுடைய பிரபலவைத்தியர் தீபக் அமரபுர்கார் மும்பையில் பெய்த கனமழையின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது காரில் வீடு திரும்பியபோது இவர் கானாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் கனத்த மழையிடையே எல்பின்ஸ்டோன் சாலையில் உள்ள வீட்டின் அருகே இவரது கார் சென்ற போது இடுப்பளவு தண்ணீரில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் காரில் இருந்து இறங்கி, குடைபிடித்தபடி இடுப்பளவு தண்ணீரில் நடந்து சென்றுள்ளார். அப்போது சாக்கடை கால்வாய் மூடி திறந்து கிடந்த பகுதியில் சென்றபோது சாக்கடையில் தவறி விழுந்துள்ளார். இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் பரவின.
இந்நிலையில், பல மணி நேர தேடுதல் பணிக்குப் பின் வொர்லி கடற்கரை அருகே உள்ள சாக்கடை கால்வாயில் இன்று காலை வைத்தியர் தீபக்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
மழை நீரில் நடந்த வந்தபோது திறந்து கிடந்த சாக்கடையில் டாக்டர் தீபக் தவறி விழுந்ததாகவும், அவரது சத்தம் கேட்டும் உதவி செய்ய முடியாமல் போனதாகவும் நேரில் பார்த்த சிலர் கூறியுள்ளனர்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. மேலும் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மழை குறைந்து வெள்ளம் வடியத் தொடங்கியதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.