குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பங்களாதேஸ் மியன்மார் எல்லையிலுள்ள ஆற்றிலிருந்து 20 ரொகிங்யா அகதிகளின் உடல்களை மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவ் ஆற்றுப்பகுதியிலிருந்து 12 சிறுவர்கள் மற்றும் பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக டெக்னவ் பகுதியிலுள்ள பங்களாதேஸ் எல்லைபாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பங்களாதேஸை நோக்கி செல்ல முயன்றவேளை ஆற்றில் படகு கவிழ்ந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மியன்மாரில் நிலை சிறப்பாகயில்லை எனவும் ரொகிங்யா இனத்தவர்கள் அனைவரும் எல்லையை கடந்து பங்களாதேஸ் வரமுயல்கின்றனர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களால் மியன்மார் பகுதியில் கரும்புகைமண்டலத்தை பார்க்க கூடியதாகவுள்ளது எனவும் அடிக்கடி துப்பாக்கி சத்தங்களும் கேட்கின்றன எனவும் தெரிவிக்கும் அதிகாரிகள் தங்கள் நாட்டை நோக்கி வரும் அகதிகளின் எண்ணிக்கை நாளிற்குநாள் அதிகரித்து செல்கின்றது என தெரிவித்துள்ளனர்
மேலும் தங்கள் நாட்டை நோக்கி வரமுயலும் அகதிகளை தடுத்து நிறுத்திவருகின்றோம் எனவும் சட்டவிரோத ஊருடுவலை தடுக்கவே இவ்வாறு செய்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் சுமார் 1000ற்கும் மேற்பட்டவர்களை திருப்பி அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.