குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக ஏன் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த முன்னணியின் கூட்டணி அமைப்பான படைவீரர்களை பாதுகாக்கும் கூட்டமைப்பின் அழைப்பாளர் அஜித் பிரசன்ன இது குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பிரேஸிலுக்கான முன்னாள் தூதுவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதனால் சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்படவில்லையா என கேள்வி எழுப்பியுள்ளார். ஜகத் ஜயசூரியவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் இலங்கை அரச படையினருக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது என தெரிவித்துள்ள அவர் தமிழ் புலம்பெயர் அமைப்புக்களினால் சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்கள் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க, கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யா ஆகியோரை நியமிக்கும் போது அரசாங்கம் சரியான வழிமுறைகளை பின்பற்றி நியமனம் வழங்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.