குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞர் ஒருவரை சித்திரவதை க்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்தமை தொடர்பிலான வழக்கின் கண்கண்ட சாட்சியத்திற்கு அனுராதபுர சிறைச்சாலையில் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு உள்ளதாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முறையிடப்பட்டு உள்ளது.
அது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது ,
சுன்னாக பொலிசாரினால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்திரவதை புரிந்து படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கின் கண்கண்ட சாட்சியம் ஒருவர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கொன்றில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. அதனால் குறித்த சாட்சியம் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்.
அந்நிலையில் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற வழக்குக்காக , இளைஞனின் படுகொலை வழக்கின் சாட்சியம் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நேற்று முன்தினம் புதன் கிழமை அழைத்து வரப்பட்டு இரவு அனுராத புர சிறைச்சாலையில் தடுத்து வைக்கபப்ட்டார்.
அதன் போது அன்றையதினம் இரவு அனுராத புர சிறைச்சாலையில் வைத்து சாட்சியத்திற்கு இனம் தெரியாத நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அது தொடர்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் இளைஞன் படுகொலை வழக்கின் சாட்சியம் முற்படுத்தப்பட்ட வேளை நீதவானிடம் சாட்சி தனக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் தொடர்பில் முறையிட்டார்.
அதனை அடுத்து நீதவான் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு பணித்தார்.
சித்திரவதை மற்றும் கொலை வழக்கின் பின்னணி.
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி சுன்னாக பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சுமணன் எனும் இளைஞரை பொய் குற்றசாட்டின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சித்திரவதை செய்து படுகொலை செய்தனர் எனவும், படுகொலை செய்யப்பட்டவரின் உடலை கிளிநொச்சி இரணைமடு குளத்தில் வீசி தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் கூறியதாகவும் , படுகொலையானவரின் நண்பர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு யூலை மாதம் 25ஆம் திகதி மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.யூட்சன் முன்னிலையில் சாட்சியம் அளித்து இருந்தனர்.
அதனை அடுத்து சுன்னாகம் காவல் நிலையத்தை சேர்ந்த அப்போதைய நிலைய பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டார , மயூரன் , தயாளன் , சஞ்ஜீவ ராஜபக்சே , ஜெயந்த , வீரசிங்க , கோபி (குறித்த நபர் நாட்டில் இல்லை , அவருக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து நீதிமன்றினால் பிறப்பிக்கபட்டு உள்ளது.) லலித் , ஆகிய 8 காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சித்திரவதை குற்ற சாட்டுக்கு எதிராக யாழ்.மேல் நீதிமன்றிலும் , படுகொலை குற்றத்திற்கு எதிராக கிளிநொச்சி நீதிமன்றிலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சித்திரவதை குற்ற சாட்டு தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணையின் போது கோபி மற்றும் லலித் ஆகியோர் சித்திரவதை குற்ற சாட்டில் குற்றமற்றவர்கள் என மேல் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட நிலையில் ஏனைய ஆறு பேரும் குற்றவாளிகளாக தீர்பளிக்கப்பட்டது.
அதில் 5 காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு எதிராக கொலை குற்றசாட்டு சுமத்தப்பட்டு கிளிநொச்சிநீதிமன்றில், கொலை குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடைபெற்று வருகின்றது.