இலங்கையில் பொலித்தீன் உற்பத்தி , விற்பனை மற்றும் பயன்பாடு தொடர்பான தடை இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
தேசிய, மத, கலாசார மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கும் பொலித்தீன் பயன்பாட்டுக்கான தடை நடைமுறையில் இருக்கும் எனவும் குறித்த அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிவித்தலின் பிரகாரம் ஹை டென்சிட்டி பொலி எத்திலீன் எனப்படும் அதிக அடர்த்தி கொண்ட உறைகள் மற்றும் ரெஜிபோம் உணவு பெட்டி ஆகியவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உணவு பொதியிடல் , நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நாளொன்றுக்கு 15 மில்லியன் பொலித்தீன் உணவுப் பைகளும், பொருட்கள் வாங்குவதற்காக 20 மில்லியன் பnhலித்தீன் பைகளும் பயன்படுத்தப்படுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பயன்படுத்தப்படும் 40 வீதமானவை மீள் சுழற்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்ற, அதேவேளை மிகுதி 60 வீதமும கழிவாக தேங்குவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொலித்தீன்கள் உக்காத காரணத்தினால் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதால், அவற்றுக்கு தடை விதிக்க கடந்த ஜுலை 7ஆம் திகதி அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
இதேவேளை ஏற்கனவே கையிருப்பிலுள்ள பொலித்தீன் உற்பத்திகள் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்குப் பதிலாக மாற்று உற்பத்தி அறிமுகப்படுத்தல் ஆகிய காரணங்களை முன் வைத்து 6 மாதங்களுக்கு சலுகை வழங்குமாறு பொலித்தீன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினால் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.