நீட் பரீட்சையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில், தமிழகத்தில் அரியலூர் பிரதேசத்தின் குழுமூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அனிதா. இவரது குடும்பம் மிகவும் ஏழ்மையானது. இவரது தந்தை சண்முகம் கூலித் தொழிலாளி.
பிளஸ் 2 பரீட்சையில் இவர் 1200-க்கு 1176 புள்ளிகளைப் பெற்றிருந்தார். மருத்துவப் படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் மதிப்பெண் வைத்திருந்தார். ஆனால், நீட் அடிப்படையிலேயே மருத்துவ சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டதால் மருத்துவ படிப்புக்கான வாய்ப்பை இழந்தார்.
சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த அனிதா தனது கனவு தகர்ந்ததால் மன அழுத்தத்தில் இருந்தார். மன அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டார் என அனிதாவின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
நீட் பரீட்சையின் அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சில மாணவர்கள் மனு தாக்கல் செய்தனர். நீட் ஆதரவு மாணவர்களுக்காக நளினி சிதம்பரம் ஆஜரானார். இந்த வழக்கில் எதிர் மனுதாரராக அனிதா சேர்க்கப்பட்டிருந்தார்.