மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் எனவும் அத்துடன் கொடூர கொலைத்தாக்குதல்களை நிறுத்தி உடனடியாக ஐ.நா. விசாரணை செய்ய வேண்டும் எனவும் கோரி இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று அட்டாளைச்சேனை கோணாவத்தையில் இடம்பெற்றது.
அம்பாறை மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எல்.எம்.வாஹிட், பிரதி சுகாதார அமைச்சின் இணைப்பாளர் போராளி சுபியான் ரமீஸ், வைத்திய கலாநிதி டாக்டர் நக்பர் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக வந்திருந்த பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு உடனடியாக அராபிய நாடுகள் கடும் போக்குடனான கட்டளைகளையிட வேண்டும் என்றும் வல்லரசுகள் முஸ்லீம்கள் விடயத்தில் பொடுபோக்காய் இருப்பதனை கண்டிக்கிறோம் என்றும், ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும் அல்லது அம்மகளுக்கு பிறநாடுகளில் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோசம் எழுப்பினர்.