Home இலங்கை வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

வடமாகாணத்தில் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு: குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

by admin
வடமாகாண கல்வி அமைச்சினால் முறையற்ற நியமனங்கள் வழங்கபடுவதை கண்டித்தும், முறைகேடுகளை சுட்டிகாட்டி யாழ்.பல்கலைகழக உளவியல் பட்டதாரிகள் வடமாகாண ஆளுநர், முதலமைச்சர், கல்வி அமைச்சர் ,கல்வி அமைச்சின் செயலாளர்,பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மற்றும் வட மாகாண கல்வித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது,
கடந்த 05/ 07/ 2017ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில்    பாட பகுதி வழிகாட்டலும், ஆலோசனையும் எனும் ஆசிரியர் நியமனத்திற்கு எதிர்பார்க்கப்படும் அடிப்படைக் கல்வித்தகைமைக்கு உளவியல் தவிர்ந்த ஏனைய சில பாடப்பட்டங்களை கொண்ட பட்டதாரிகளையும் இணைத்துள்ளீர்கள்.
இத்தகைய உங்களின் அறிவித்தலானது 15/01/2013ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட  ED/1/2/1/3/60 இலக்க கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு முரணானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
குறித்த சுற்று நிருபத்தின் அடிப்படையில் பாடசாலைகளில் சிரே~;ட மாணவர் ஆலோசனை பதவித் தெரிவு குறித்து வரையறை செய்கையில், “ஆலோசனைகள் தொடர்பாக மனோவியல்  (Psychology) கலைமாணிப் பட்டம் அல்லது அதனை விட மேற்பட்ட தகைமை பெற்றிருக்க வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
மேற்குறித்த சுற்று நிருபத்தை அடிப்படையாகக் கொண்டே தற்போது அண்ணளவாக முன்னூறிற்கும் மேற்பட்ட மாணவர்கள் உளவியலை சிறப்புக் கலையாகவும், பொதுக் கலையாகவும் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள். எனவே குறித்த நிலைமைகளை கருத்தில் கொண்டு தங்களின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நான்கு வருடங்களாக முப்பதற்கும் மேற்பட்ட பாட விதானங்களூடாகவும், கள ஆய்வுகள், மதிப்பீடுகள், பரிசோதனைகளூடாகவும் வழிகாட்டலையும் ஆலோசனை வழங்கலையும் முறையாகக் கற்ற உளவியல் பட்டதாரிகளுடன் ஏனைய இது சார்ந்த ஒரிரு பாடங்களை மேலெழுந்தவாரியாக கற்ற ஏனைய பாடப் பட்டதாரிகளையும்  இணைத்து நியமனங்களை வழங்குவதானது தமிழ் சமுதாயத்தில் உளவளத்துணையின் நிலையை கேலிக்கூத்தாக மாற்றுவதாகவும், அறியாமையின் வெளிப்பாடாகவுமே அதனை நாம் கருதுகின்றோம்.
இந்தவகையில் கடந்த வருட ஆட்சேர்ப்பின் போது குறித்த விடயங்கள் சரியாக பின்பற்றப்பட்டிருந்த அதேவேளை  இந்த வருடம் மட்டும் குறித்த தெரிவில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைக்கு ஏதும் பின்புலமிருக்குமோ என்று மாணவர்களாகிய எங்களை எண்ணத் தூண்டுகின்றது தங்களின் இத்தகைய செயற்பாடு.
திசை மாறிச் செல்லும் எதிர்கால சந்ததியை பாதுகாக்க வேண்டியது உங்களைப் போன்ற கல்வியியலாளர்களதும், அதிகாரிகளினதும் கடமையே ஆகும். இதனடிப்படையில் இவ்வாறான முறையற்ற நியமனங்களை மேற்கொள்வதனால் பாதிப்படையப் போவது எமது தமிழ் சமுதாய  மாணவர்களே!
ஏனெனில், ஆலோசனை  வழங்கல் என்பது மனித மனங்களுடன் மேற்கொள்ள வேண்டிய பணி ஆகும். இது தவறான நியமனங்களூடாக மேற்கொள்ளப்படும் போது எமது மாணவர்களின் சிறு பிரச்சினைகள் கூட தவறாக முத்திரை குத்தப்பட்டு அதன் வழியிலேயே வழிப்படுத்தப்படுவார்கள் அல்லது ஆலோனைகளை பெற்றுக்கொள்வார்கள். முறையாக மாணவர்களை மதிப்பீடு செய்யவோ நடத்தைகளை பரிசோதனை செய்யவோ இயலாத வேறு பாட பட்டதாரிகளை இதில் இணைத்துக்கொள்ள மேற்கொண்ட தீர்மானம் தவறானது. ஆதலால் இவ்விடயத்தில் அதிகளவான கரிசனை காட்ட வேண்டியது தங்களின் பொறுப்பாகும்.
சமூகவியல் பட்டதாரிகள் ASYE 22013 எனும் இலக்கம் கொண்ட Counselling and social support  எனும் பாட அலகையே கற்கின்றார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு குறித்த பட்டதாரிகளை கொண்டு வெற்றிடத்தை நிரப்ப முயல்வது தவறான செயற்பாடாகும்.
இருப்பினும் குறித்த விடயத்தை பெரு மதிப்பிற்குரிய தாங்கள் சரியானதொன்றாகக் கருதினால் உளவியல் பட்டதாரிகள் மனைப்பொருளியல் பாடவிதானத்தில் காணப்படும் AHEC 21013, AHEC 22013, AHEC 31043 போன்ற மூன்று அலகுகளை கற்கின்றார்கள். அவ்வாறாயின் உளவியல் பட்டதாரிகளை மனைப் பொருளியல் ஆசிரியர்களாக நியமிக்க தங்களால் முடியுமா?
மொழியியல் பட்டதாரிகள் ALGC 22043 Psycho Linguistics எனும் பாட அலகையும், மெய்யியல் பட்டதாரிகள் APHC 22013 இலக்கம் கொண்ட  General Psychology மற்றும் APHC 32023 இலக்கம் கொண்ட psychology of Social Behaviour எனும் பாட அலகையும் கற்றவர்கள். அவ்வாறாயின் அவர்களையும் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை ஆசிரியர் நியமனத்திற்கு உள்வாங்கதான் முடியுமா?
இன்று எமது சமுதாயத்தின் மக்களால் ஆற்றுப்படுத்தல் , ஆலோசனை வழங்கலின் தேவை முழுமையாக உணரப்பட்ட ஒன்றாக காணப்படவில்லை. இருப்பினும் அதன் தேவையானது அவசியம் என்பதை உயர் அதிகாரிகளாக விளங்கும் தாங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகின்றோம். முறையான நியமனங்களூடாக குறித்த துறைக்கு ஆட்களை சேர்ப்பீர்களாயின் சமுதாயம் விழிப்புணர்வு பெறும் அதேவேளை தங்களின் நியமன நோக்கங்களும்  நிறைவேறும் என்பதைக் இச் சந்தர்ப்பத்தில் கூறிக் கொள்கின்றோம்.
ஆலோசனை வழங்கல் என்பது, பிரச்சினை ஒன்று தொடர்பாக ஆலோசனை பெறுவதற்காக உதவி நாடி வருகின்ற ஒருவரின் நிலைகள் மற்றும் தேவைகளைப் பொறுத்துத் தெரிந்தெடுக்கப்பட்ட செயற்பாடுகளாக இது மாற்றமுறும். இச்செயற்பாடுகள் ஒரு நபரின் உணர்வுகள், எண்ணங்கள் நடத்தைகள் போன்றவற்றை மையமாகக் கொண்டவை. இதனடிப்படையில் குறித்த பணியினை செப்பனுற ஆற்றுவதற்கு மனித நடத்தைகளை விஞ்ஞானபூர்வமாக ஆராயும் பாடமான உளவியலை கற்றவர்களே பொருத்தமானவராக காணப்படுவர்.ஆதலால் இச் சந்தர்ப்பத்தில் எப்பாடப் பட்டதாரிகளை குறித்த பதவிக்கு நியமிக்க வேண்டும் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எத்துறைசார் பட்டதாரிகளும் கலைப்பாடங்களை கற்று மாணவர்களுக்கு கற்பிக்க முடியும். ஆனால் வழிகாட்டலும் ஆலோசனையும் என்பது அவ்வாறல்ல. முறையான களஆய்வு, தனியாள் ஆய்வு, பாடவிதானங்கள், ஆலோசனை வழங்கலின் ஒழுக்க நெறிகள் (Counselling Ethics) என்பவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். இவையாவும் உளவியல் எனும் பாடத்தை மையமாக் கொண்டே காணப்படுகின்றது.
இதனடிப்படையில் எமது மாணவ சமுதாயத்தின் ஒளிமயமான எதிர்காலம் தங்களின் முறையான நியமனத்திலேயே தங்கியுள்ளது என்பதை மிகத்தயவுடன் எடுத்துக் கூற விரும்புகின்றோம்.
இறுதியாக சுற்று நிருபங்கள் என்பது சட்டப் பெறுமானம் கொண்டவையே. ஆகவே, சுற்று நிருபங்களுக்கு முரணான செயல்கள் கண்டிக்கப்படுவதோடு பாதிக்கப்படுபவர்கள் மேல்நடவடிக்கைகளுக்கு செல்வதற்கு வாய்ப்பளிப்பதாக அமையும். ஆதலால் குறித்த விடயத்தில் மிகத் தீவிரமாக கரிசனையுற்று பொருத்தமான தீர்வினை வழங்குவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். என குறிப்பிடப்பட்டு உள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More