குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி அக்கராயனில் தரித்து நிற்கும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் அக்கராயன் கிழக்கு மற்றும் மருத்துவமனையினைச் சுற்றி பயணிப்பதற்கான ஒழுங்கினை கிளிநொச்சி இலங்கை போக்குவரத்து சபையினர் மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அக்கராயன், ஸ்கந்தபுரம் குடியேற்றத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்ட போது திருமுறிகண்டி வழியாகவே அக்கராயன், ஸ்கந்தபுரம் கிராமங்களில் மக்கள் குடியேறினர். அதனடிப்படையிலேயே தற்போது அக்கராயன் மருத்துவமனைச் சந்தியில் இருந்து ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் வயல் வெளி வரை வீதி புனரமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிளிநொச்சியில் இருந்து புறப்படும் பேருந்துகள் ஸ்கந்தபுரம் வழியாக அக்கராயன் மகா வித்தியாலயம் கடந்து அம்பலப்பெருமாள் சந்தி வரையும் மற்றும் முழங்காவில் பகுதிகளுக்கு பேருந்துகள் பயணிக்கும் நிலையில் அக்கராயன் மருத்துவமனை சூழல், அணைக்கட்டு வீதி, அக்கராயன் கிழக்குப் பகுதிகளுக்கு பேருந்து சேவைகள் இடம் பெறாததன் காரணமாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு அதிகமான தூரம் நடந்து சென்றே பஸ்களில் பயணிக்க வேண்டிய அவலம் காணப்படுகின்றது.
இந்நிலையில் அணைக்கட்டு வீதி அக்கராயன் கிழக்குப் பகுதிகளுக்கு அம்பலப்பெருமாள் சந்தி வரை பயணிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் மேற்படி பகுதிகள் ஊடாக பணியில் ஈடுபடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் ஆயிரம் வரையான குடும்பங்கள் அக்கராயன் மருத்துவமனைக்கு வந்து செல்லக் கூடிய நிலைமை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.