குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ்குமார் தப்பித்து செல்ல உதவிய குற்றசாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபரை எதிர்வரும் 13ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
சுவிஸ் குமார் தப்பி செல்ல உதவியமை தொடர்பிலான வழக்கு விசாரணை இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் , பதில் நீதவான் இ. சபேசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
அதன் போது குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள வடமாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபரும் தற்போதைய மத்திய மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபருமான லலித் ஏ ஜெயசிங்க மன்றில் முற்படுத்தப்பட்டார்.
அதேவேளை குறித்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் உப காவல்துறை பரிசோதகர் சு. ஸ்ரீகஜன் தலைமறைவாகியுள்ளார். அதனை அடுத்து அவருக்கு எதிராக மன்றினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்றைய தினம் வழக்கு விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையை அடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 13 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவு இட்டார்