குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடக்கு மாகாணசபையின் 104வது அமர்வு இன்று கைதடி பேரவை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் இருபதாவது அரசியல் யாப்புத் திருத்தம் சம்பந்தமாக கருத்துக்கள் தெரிவித்துள்ளார்.
இன்று நாங்கள் பரிசீலிக்கும் 20வது திருத்தச்சட்ட வரைவானது 1978ம் ஆண்டின் அரசியல் யாப்புச் சம்பந்தமாக கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் எல்லாவற்றிலும் மிகவும் மோசமானது என்று வர்ணிக்கப்பட்டிருக்கின்றது.
இந்தத் திருத்தமானது நான்கு விடயங்களைக் கருத்தில் கொண்டுள்ளது.
1. சகல மாகாணசபைகளினதும் தேர்தலை ஒரே காலத்தில் நடத்துவது.
2. மாகாணசபைகளின் தற்போதைய வாழ் காலத்தை நிர்ணயிப்பதை பாராளுமன்றத்திற்கு அளிப்பது.
3. சில மாகாணசபைகளின் வாழ் காலத்தை நீடிப்பது சிலவற்றின் வாழ்காலத்தைக் குறைப்பது.
4. மாகாணசபைகளின் வாழ் காலத்தை நிர்ணயித்து அவற்றை அதிகாரம் இழக்கச் செய்த பின் அச் சபைகளின் அதிகாரங்களைப் பாராளுமன்றம் கைப்பற்றிக் கொள்வது.
சகல மாகாணசபைகளினதும் தேர்தலை ஒரே காலத்தில் நடத்துவது, மாகாணசபைகளின் தற்போதைய வாழ் காலத்தை நிர்ணயிப்பதை பாராளுமன்றத்திற்கு அளிப்பது, சில மாகாணசபைகளின் வாழ் காலத்தை நீடிப்பது சிலவற்றின் வாழ்காலத்தைக் குறைப்பது மற்றும் மாகாணசபைகளின் வாழ் காலத்தை நிர்ணயித்து அவற்றை அதிகாரம் இழக்கச் செய்த பின் அச் சபைகளின் அதிகாரங்களைப் பாராளுமன்றம் கைப்பற்றிக் கொள்வது.
அரசியல் யாப்பின் 154பு(2) என்ற உறுப்புரையின் படி 13வது திருத்தச் சட்டத்தின் அதிகாரப்பரவல் சம்பந்தமான நிலைப்பாட்டினை மாற்றுஞ் சட்டம் ஏNதுனும் கொண்டுவரப்பட்டால் அந்தத் திருத்த வரைபை ஒவ்வொரு மாகாணசபைகளுக்கும் அவற்றின் கருத்தறிய ஜனாதிபதியானவர் அனுப்ப வேண்டும் என்றும் அந்தத் திருத்தம் பாராளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் இடம்பெற முன் இது செய்யப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு இந்தத் திருத்தம் சம்பந்தமாகச் செய்யப்படவில்லை. அதன் தாற்பரியம் என்னவென்றால் மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பாதிக்குந் திருத்தச் சட்டமெதுவும் கொண்டுவருவதாகவிருந்தால் அவை மாகாணசபைகளுக்கு அனுப்பப்பட்டு அவற்றின் கருத்தை அறிந்து, திருத்தமானது பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் போது அந்தக் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவற்றை உள்ளடக்கியே இறுதியான திருத்தம் பாராளுமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பதே. அதை விட்டு அவசர அவசரமாக இந்தத் திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தின் ஒழுங்கு நிரலில் ஏற்கப்பட்டுள்ளது. ஆகவே அரசியல் யாப்பின் உறுப்புரை 154பு(2) மீறப்பட்டுள்ளது,
அரசியல் யாப்பின் 3வது உறுப்புரையைப் பரிசீலித்தோமானால் இறைமையானது மக்கள் வசமுள்ளது எனப்பட்டுள்ளது. இந்த இறைமையானது மக்களின் தேர்தல் உரித்தையும் உள்ளடக்கியுள்ளது. ஆகவே பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் வந்தபின் ஒன்பது மாகாண மக்களும் தம் சார்பில் தமது மாகாணசபைகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் உரித்தைப் பெற்றிருந்தார்கள். இந்த இருபதாவது திருத்தச் சட்டம் மூலம் மாகாண மக்களுக்கிருக்கும் அந்த உரித்தை பாராளுமன்றத்திற்கு மாற்ற எத்தனிக்கப்படுகின்றது. மாகாணசபையை சட்டப்படி கலைத்து புதிய தேர்தலை எதிர்நோக்கவைக்கும் அதிகாரம் மாகாணசபையையே சாரும். இந்தத் திருத்தச் சட்டத்தின் படி மாகாணசபையைக் கலைக்கும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமது மாகாணசபைகளைக் கலைத்து உரிய நேரத்தில் தேர்தல் நடத்தும் மாகாண மக்களின் அதிகாரம் இந்தச் சட்டத்தின் படி பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டு குறிப்பிட்ட நாளுக்கு முன் தமது காலத்தை முடிவுறுத்த வேண்டிய மாகாணசபைகள் குறிப்பிட்ட நாள் வரையில் தமது தேர்தலை நடத்தமுடியாதாக்கப்படுகின்றது. அதாவது மாகாண மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரித்து இதனால் பாதிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித்தலைவர் இதையே ஒரு வரப்பிரசாதமாக கருதியிருந்தார். ஆனால் அவ்வாறு என்னால் ஏற்கமுடியாதிருக்கின்றது. இந்த நடவடிக்கையில் எமது மக்களே முக்கியமானவர்கள். எமது பதவிக்காலம் முடிவடைந்ததும் புதிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவர்களுக்கே உண்டு. தற்போதிருக்கும் உறுப்பினர்களின் வாழ் காலத்தை பாராளுமன்றம் நீடிப்பதானது மாகாண மக்களுக்கிருக்கும் தேர்தல் உரித்தைப் பறிப்பதான நடவடிக்கையாகிவிடும். எமது வாழ்நாள் நீடிக்கப்படுகின்றது என்பதற்காக மக்களின் தேர்தல் உரித்தை அரசியல் காரணங்களுக்காகப் பறிப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும்.
மாகாண உறுப்பினர்கள் தொடர்ந்து பதவி வகிக்கலாம் என்று நாம் கூறினால் அவர்கள் வழிக்கு வந்துவிடுவார்கள் என்று எண்ணும் அரசாங்கத்திற்கு வடமாகாணப் பிரதிநிதிகள் அப்படியல்ல, உங்கள் சலுகைகளைக் கண்டு எமது உரிமைகளைக் கைவிடும் மக்கள் பிரதிநிதிகள் நாமல்ல என்பதை வெளிப்படையாகத் தெரியப்படுத்த வேண்டும். அதே போன்று குறிப்பிட்ட தினத்துக்குப் பின் தமது வாழுங் காலத்தை இழக்கும் மாகாணசபைகள் உரிய தினத்துக்கு முன்னரே கலைக்கப்படப்போகின்றன. அதுவும் அம் மாகாணசபை மக்களின் தேர்தல் உரித்தைப் பாதிக்கப்போகின்றது.
மாகாண மக்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் சட்ட வரைபே இந்த 20வது திருத்தச்சட்டம். எமது அரசியல் யாப்பு உறுப்புரை 10 மக்களின் சிந்தனைச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதை தடைசெய்கின்றது.
ஜனநாயகம் பற்றிப் பேசும் அரசாங்கம் மக்கள் முன் போகப் பயப்படுகின்றது. அதனால்த்தான் இவ்வாறான சட்டங்களை இயற்றப் பார்க்கின்றது. ஆகவே அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்க எத்தனித்துள்ளது. மாகாண மக்களின் அடிப்படை உரித்தின் மேல் கைவைத்துள்ளது. மாகாணசபைகளுக்கான அதிகாரப்பகிர்வில் கெட்டியாக இருக்கின்றோம் என்று கூறிய அரசாங்கம் இதன் மூலம் தமது அரசியல் காரணங்களுக்காக எதையுஞ் செய்ய வல்லது என்ற கண்டனத்திற்கு உள்ளாகின்றது.
ஆனால் இவை எல்லாவற்றையும் விட வட கிழக்கு மாகாண மக்களைப் பாதிக்கக்கூடிய ஏற்பாடுதான் மாகாணசபைகளைக் கலைத்த பின் அவற்றின் அதிகாரங்களைப் பாராளுமன்றம் பிரயோகிக்கும் என்பது. இது முற்றுமுழுதுமாகக் கண்டிக்கப்பட வேண்டியது. மாகாணசபைகளின் அதிகாரங்களைப் பாதிக்கும், அல்லது அந்த அதிகாரங்கள் பற்றிய, சட்டங்களை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதாகவிருந்தால் மாகாணசபைகளின் கருத்தறிய வேண்டும். அவ்வாறான மாகாணசபைகளின் கருத்தை வெளியிடும் அதிகாரத்தைப் பாராளுமன்றம் தனதாக்கிக் கொண்டதனால் எமக்குத்தரவிருக்கும் அரசியல் யாப்பு உரித்துக்களைத் தான்தோன்றித்தனமாகப் பாராளுமன்றமே தீர்மானித்து, இந்தியாவின் அனுசரணையின் கீழ் நாம் பெற்ற 13வது திருத்தச்சட்டத்தைக்கூட தமக்கேற்றவாறு இலங்கைப் பாராளுமன்றம் மாற்றியமைக்க வழி கோலுகின்றது. இது வட கிழக்கு மாகாணசபைகளையே அதிகமாகப் பாதிக்கும் தற்போது அரசாங்கம் கூறிவரும் இனப்பிரச்சனை சம்பந்தமான அரைகுறைத் தீர்மானத்தை எம் மீது திணிக்க இந்தச் சட்டம் வழிவகுக்கின்றது. முழுமையான நிலைபேறு தீர்வொன்றினைக் கொண்டுவர அரசாங்கம் தயங்குவதாகத் தெரிகின்றது.
மேலும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்துவோம் என்று கூறும் அரசாங்கம் இந்த அரசாங்க காலம் வரையில் தேர்தலை நடத்தாமல் இருக்கவும் இந்தச் சட்டம் வழிவகுக்கின்றது. ஊவா மாகாணசபையின் காலம் 2019ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் முடிவடைகிறது. அதற்கிடையில் தினமொன்றை நிர்ணயித்து மாகாணசபைத் தேர்தல்களை தாமதப்படுத்தவே இந்த ஏற்பாடு.
இதனால் பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் இந்தச் சட்ட வரைபை எதிர்க்க வேண்டும்.
1. மாகாணமக்களின் தேர்தலுரித்துடன் சேர்ந்த இறையாண்மை பாதிக்கப்படுகிறது.
2. அந்த உரித்தைப் பாராளுமன்றம் தன்வசப்படுத்தி மாகாண உரித்துக்களைத் தான் பாவிக்க எத்தனிப்பது மாகாண மக்களுக்குக் கொடுத்த அதிகாரப்பரவலை சிரிப்புக்கிடமாக்குகின்றது.
3. அந்த உரித்தைப் பாராளுமன்றம் தன்வசப்படுத்தும் போது, முக்கியமாகத் தமிழ் பேசும் மக்கள் கோரும் அரசியல் ரீதியான கோரிக்கைகள் அனைத்தும் காற்றில் பறக்க விட்டுத் தான்தோன்றித்தனமான அரசியல் யாப்பொன்றை எம் மீது திணிக்க வாய்ப்பிருக்கின்றது.
எனவே இதனை எதிர்த்து தீர்மானம் எடுக்குமாறு என் அன்பான உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கின்றேன். என தெரிவித்தார்