குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இளம், பதிவு செய்யப்படாத குடியேற்றவாசிகளிற்கு பாதுகாப்பளிக்கும் ஓபாமா காலத்தின் திட்டத்தினை டிரம்ப் நிர்வாகம் இரத்துச்செய்யவுள்ளதாக அமெரிக்க சட்டமா அதிபர் ஜெவ்செசென்ஸ் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். டக்கா என அழைக்கப்படும் குறிப்பிட்ட திட்டம் ஓரு ஓழுங்கான முறையில் முடிவிற்கு கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்காக அமெரிக்க சட்டமா அதிபர் முன்னாள் ஜனாதிபதியை கடுமையாக சாடியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி அரசமைப்பிற்கு மாறாக செயற்பட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஓபாமாவின் இந்த திட்டத்தினால் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ள அதேவேளை சட்டவிரோத அந்நியர்கள் அந்த வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொண்டனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
ஓருவருடத்தில் எத்தனை குடியேற்றவாசிகளை உள்வாங்கலாம் என்பது குறித்து அமெரிக்கா தீர்க்கமான முடிவை எடுக்கவேண்டும் எனவும் உள்ளே வரும் அனைவரையும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை அமெரிக்கா ஜனாதிபதியினால் இரத்துச்செய்யப்படவுள்ள இளம், பதிவு செய்யப்படாத குடியேற்றவாசிகளிற்கு பாதுகாப்பளிக்கும் திட்டத்தின் ஆதரவாளர்கள் ஜனாதிபதி டிரம்பின் மகளின் வீட்டிற்கு வெளியே ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்
டிரம்பின் மகள் இவன்காவின் வீட்டிற்கு வெளியே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் ஓபாமாவின் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தை இரத்துச்செய்வதற்கு எதிராக அமெரிக்காவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
ஒபாமாவின் இளம் குடியேற்றவாசிகளிற்கு பாதுகாப்பளிக்கும் திட்டத்தை ரத்து செய்ய டிரம்ப் தீர்மானம்
Sep 4, 2017 @ 14:30
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இளம் பதிவு செய்யப்படாத குடியேற்றவாசிகளிற்கு பாதுகாப்பளிக்கும் அமெரிக்க அரசாங்த்தின் திட்டத்தை இரத்துச்செய்வதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார் . அமெரிக்காவிற்குள் சிறுவர்களாக சென்ற சில சட்டவிரோத குடியேற்றவாசிகளிற்கு மன்னிப்பளித்து அவர்களை நாடுகடத்துவதை இரண்டு வருடத்திற்கு பிற்போடும் ஓபாமா காலத்தின் திட்டத்தையே கைவிட டிரம்ப் தீர்மானித்துள்ளார். மேலும் இந்த திட்டம் அவர்களிற்கு கல்வி மற்றும் தொழில்வாய்ப்புகளிற்கான அனுமதியையும் வழங்கியிருந்தது.
குறிப்பிட்ட திட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை உருவாக்குவதற்காக அவர் அமெரிக்க காங்கிரஸிற்கு ஆறு மாத கால அவகாசத்தை வழங்கியுள்ளார். அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் போல்ரையனிற்கு வெள்ளை மாளிகை இதனை அறிவித்துள்ளது. கடந்த வாரம் இந்த திட்டத்தை இரத்துச்செய்யவேண்டாம் என ரையன் டிரம்பிடம் கோரியிருந்தார்.
அவர்களது பெற்றோர்களால் அமெரிக்காவிற்குள் அழைத்து வரப்பட்ட குழந்தைகள் வேறு எந்த தேசத்தையும் அறியாதவர்கள் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இதேவேளை குடியரசு கட்சியை சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும் வர்த்தகப்பிரமுகர்களும் இளம் பதிவு செய்யப்படாத குடியேற்றவாசிகளிற்கு பாதுகாப்பளிக்கும் திட்டத்தை இரத்துச்செய்வதற்கு தங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
தேர்தல் பிரச்சார காலத்தில் இந்த திட்டத்தை கடுமையாக விமர்சித்திருந்த டிரம்ப் இதனை உடனடியாக நிறுத்துவேன் என குறிப்பிட்டிருந்தார். எனினும் பின்னர் அவர் அதனை நீக்குவது மிகவும் கடினமான விடயமாக காணப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்