குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ வெளிச்சம் (எலிய) என்ற பெயரில் உருவாக்கியுள்ள புதிய அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்விற்கு மதத் தலைவர்கள், அரசியல்வாதிகள், புத்திஜீவிகள் மற்றும் கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன பிரச்சினை, காணாமல் போனோர் குறித்த சட்ட மூலம் உள்ளிட்ட நாடு எதிர்நோக்கியுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த அமைப்பு உருவாக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாம் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றே கோதபாய ராஜபக்ஸ இதுவரையில் கூறி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையை “வெளிச்சம்” (ஒளியாக்க) ஆக்க வருகிறார் கோத்தாபய!
Sep 5, 2017 @ 04:21
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் “எலிய” (வெளிச்சம் – ஒளி) எனப்படும் புதிய அமைப்பு உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த அமைப்பு நாளை ஆரம்பிக்கப்படும் என்பதோடு அதன் முதல் பொதுக் கூட்டம் பொரலஸ்கமுவை பிரதேசத்தில் நாளை இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து இலங்கைப் பிரஜைகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஒளியேற்றும் நோக்கம் என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்படவுள்ள “எளிய” அமைப்பபின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஒன்றிணைந்த கூட்டு எதிரணியினரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும், இது கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் பிரவேசத்திற்கான ஆரம்பகட்ட நகர்வு எனவும் தெரிவிக்கப்படுகின்றது.