Home உலகம் Blue_whale ஒரு படிப்பினை…

Blue_whale ஒரு படிப்பினை…

by admin

தற்கொலைக்கு தூண்டும் ஒரு விளையாட்டும் அதை தடுப்பதற்கான எத்தனங்களுமாய் நாட்கள் நகருகின்றன.
விழிப்புணர்வு ஏற்படுத்துவதாய் வட்ஸ் அப்பிலும் பேஸ்புக்கிலும் பகிரப்படும் தகவல்களே இந்த விளையாட்டிற்கு விளம்பரமானதாகத் தெரிகிறது.பொதுவாகவே “எதை செய்யாதே” என பிள்ளைகள் எச்சரிக்கப்படுவார்களோ அதையே செய்து பார்ப்பதில் அவர்கள் வல்லவர்கள்.இங்கும் அதுதான் நடக்கிறது.

உண்மையில் இங்கு என்ன தான் நடக்கிறது??

2015 ரஷ்யாவை சேர்ந்த Philipp Budeikin என்ற பல்கலைக் கழகத்திலிருந்து பலவந்தமாக நீக்கப்பட்ட உளவியல் துறை மாணவனால் உருவாக்கப்பட்ட விளையாட்டே Blue Whale Challenge.தன்னைத் தான் சிதைத்து தற்கொலை வரை நகர்த்தும் மனோவசியத்தை இதில் கனகச்சிதமாக செய்து முடிக்கிறான் இந்த மாணவன்.

#சமூகத்திற்கு_எந்த_விதத்திலும்_உபயோகமில்லாதவர்களிடமிருந்து_சமூகத்தை_சுத்தப்படுத்துவதே “இந்த விளையாட்டின் நோக்கம் என புடேய்கின் தான் கைது செய்யப்பட்ட போது வாக்குமூலம் வழங்கியிருக்கிறான்.

இதில் இன்னுமொரு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இதில் தற்கொலை செய்து கொண்டவர்கள் தன் மரணத்தின் பின் தன் உடல் அங்கங்களை தானம் செய்யச் சொல்லியிருப்பது தான்.

உண்மையில் ஆரோக்கியமான மனநிலையில் இருக்கும் எந்த ஒரு மனிதனும் தற்கொலை நோக்கிச் செல்வதில்லை என்கிறது உளவியல்.மனச் சிதைவு,மன அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களால் மட்டுமே தற்கொலை அல்லது தன்னைத் தான் வருத்திக் கொள்ளவும் முடியும் என்பது தான் உண்மை.

அப்படியென்றால் Blue Whale challenge என்ற இந்த ஆன்லைன் விளையாட்டு இவர்களை மன அழுத்தம்,மனச் சோர்விற்கு உற்படுத்துகிறதா?என கேள்வி எழலாம்.

இல்லை.இல்லவே இல்லை.

ஏதோ ஒரு வகையில் ஏற்கனவே மன அழுத்தத்திற்கு உட்பட்டவர்களே இந்த விஷப் பரீட்சைக்குள் நுழைகிறார்கள்,நுழையும் துணிவு பெறுகிறார்கள்.

50 வகையான விசித்திரமான சவால்களுக்கு இவர்கள் உட்படுத்தப் படுகிறார்கள்.ஒவ்வொரு சவாலையும் இவர்கள் வெற்றிகரமாக சாதிக்கும் போது விளையாட்டின் administrator இனால் பாராட்டப்படுகிறார்கள்.பிற போட்டியாளர்களுடன் ஒப்பிடப்பட்டு கௌரவிக்கப் படுகிறார்கள்.தனக்கென ஒரு அடையாளம்,சுய மதிப்பு இருப்பதை உணர வைக்கப்படுகிறார்கள்.இந்த மதிப்பு எனும் போதை தலைக்கேற தன்னைத் தான் மாய்த்துக் கொள்ளவும் தயங்காத நிலைக்கே வந்து விடுகிறார்கள்.

சரி ,ஏன் இவர்கள் தனக்கென ஒரு மதிப்பை தேடி ஓட வேண்டும்??

பெற்றோர்,ஆசிரியர்கள்,சமூகத்தின் நடத்தைகள்,தாய் தந்தை இருவரும் தொழிலுக்கு போவதால் ஏற்படும் தனிமை,இயற்கை சூழல் மறுக்கப்பட்டு தொழினுட்பத்திற்கு அடிமையாக்கப்பட்ட சிறு பராயம்,பரீட்சை மைய கல்வி முறையின் அழுத்தம்,போட்டி மனப் பான்மையுடன் வளர்க்கப்படல்,பெற்றோரால் புறக்கணிக்கப்படல்,தாய் அல்லது தந்தையின் நிரந்தர பிரிவு,இரசாயனங்கள் கலந்த உணவுகள் என ஏதோ ஒரு வகையில் இன்றைய சிறுவர்கள் மன அழுத்தத்திற்கு உட்பட்டே வளர்கிறார்கள்.இதில் ஒன்றோ,ஒன்றுக்கு மேற்ட்ட காரணிகளோ தாக்கம் செலுத்தும் போது இவர்கள் சுய மதிப்பற்றவராகவே தன்னை காண்கிறார்கள்.

இளவயது காதல்கள்,போதைப் பொருள் பாவனை போல , ஏதோ ஒரு வகையில் தனக்கென அங்கீகாரம் கிடைக்கும் ஒரு இடத்தை தேடி அலையும் இந்த இளைஞர்களுக்கு தன் சுய மதிப்பை உணரச் செய்கிறது இந்த விளையாட்டு. புகழ்ச்சியும்,அங்கீகாரமும் தற்காலிகமாக இவர்களை ஆறுதல்படுத்த உலகத்தின் கவனத்தை தன்பால் திருப்பி தான் மதிப்புடையவர் என நிரூபித்துக் கொள்ள கடைசியாக தற்கொலை வரை இவர்கள் சென்று விடுகிறார்கள்.

இந்த வலையிலிருந்து பிள்ளைகளை எப்படி மீட்பது???

போனில்,கம்ப்யூட்டரில் பேரன்டல் செட்டிங்ஸ் செய்தல்,இந்த விளையாட்டில் ஈடுபடுபவர்களை மீட்க ஏதோ இலக்கத்திற்கு அழைத்தல் என பல வழிகளை வட்ஸ் அப்பும்,பேஸ்புக்கும் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறது.
அதெல்லாம் ஒரு புறமிருக்கட்டும்.

*முதலில் எமது பிள்ளைகளை தனிமைச் சிறையிலிருந்து வெளியில் எடுக்க வேண்டும்.

*அவர்களுக்கு நாம் இருக்கிறோம்,அவர்களை அவதானித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்த வேண்டும்.

*அவர்களுக்கென சுய மதிப்பு,அங்கீகாரம் இருப்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

*சமூகத்தில் அவர்கள் ஒரு அங்கம் என்பதை உணர்த்த வேண்டும்.

*குடும்ப,சமூக விடயங்களில் அவர்களது பார்வைக் கோணங்களுக்கு மதிப்பளிக்கப்படல் வேண்டும்.அவர்களது ஆலோசனைகளும் ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும்.

*அவர்களது ஒவ்வொரு செயலினதும் தனித்துவங்கள் கருத்திற் கொள்ளப்பட்டு போற்றப்பட வேண்டும்.

*அவர்களது திறமைகள் தட்டிக் கொடுக்கப்பட வேண்டும்.

*அவர்கள் சறுக்கும் இடங்களில் தன்னம்பிக்கை வலுப்படுத்தப்பட வேண்டும்.

#Last_but_not_least
*அவர்களுக்கும் மனம் உண்டு என்பதை நாம் உணர வேண்டும்.

நம் பிள்ளையை நாமே அங்கீகரித்து விட்டால் அவன் ஏன் யாரோ ஒரு administrator இடம் மண்டியிடப் போகிறான்???

என்ன கேமை டவுன்லோட் செய்யலாமா??

By – Fauzuna Binth Izzadeen

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More