261
நமது மண்ணை வீரசாசனமாக நாம் யாரிடம் பெறவேண்டும்
மனநிதானம் முழுக்கூறு பெற்றிருந்தால்
யாதும் மூலகாரணத்தோடு இருப்பதை உணரலாம்
வாவிக்கரையோரம் துன்புறுத்தப்பட்ட சகோதரனின் உடல்
எதிர்காலத்தை தள்ளுச்சீட்டில் தொலைக்கவில்லை
வட்டுப்போர் கொண்டு எதையும் நாம் இழக்கவில்லை
முதுமொழி தளிர் தாளவில்லை
புரட்சி சணற்சூத்திரத்தில் பதுங்குவதில்லை
இலக்கிடத்திலிருந்து யாரும் திரும்பட்டும்
இருப்பிடம் நமதல்லவா
வைரநரை நம் மொழிக்கு மின்னுகையில்
சிலந்தி நூல்மொழிகள் என்னவாகும்
கிணற்றில் கேதுதல் சூரன்கலையாகுமோ
சந்திரசாலையில் விசிறிவாழை விருந்துக்கு உதவுமோ
ஒருதலை நியாயம் யாரிடமிருந்து யாருக்கு
வேண்டும்
நிலத்துத்தி பூக்கும் காட்டிற்கு எங்கிருந்து வந்தார்களோ வந்தவழி போகட்டும்
நிலவிழுது பூக்கும் காலம் நாமறிவோம்
உயர்ந்த ஞானத்தை கேள்வி வலியோடு ஈனும்
“அப்படியே ஆகட்டும்” என்று சொல்லும் தேவதை எதிர்காற்றில் சுழலட்டும்
எனது சகோதரனின் விலாச்சூடு தணிய
எம்குடிசை வெளியே எண்வகை கட்சிகளை
வணங்கத்தான் வேண்டுமா
ஆட்சியாளனின் பேழை தீநெறியால் ஆனது
ஒடிக்கப்படும் இறகு அழைத்தபோது
அருகில் வந்த பறவையினுடையது எனில்
புதைக்கவேண்டியது பறவையை அல்ல
– தேன்மொழி தாஸ்
5.9.2017
Spread the love