நீட் தேர்வுக்கு தடை கேட்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.
நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா கடந்த முதலாம் தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் எனக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்தவகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி மாணவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி நுழைவு வாயிலில் திரண்டு, மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.
அத்துடன் அரியலூர் அரசு கலைக் கல்லூரி, நந்தனம் ஆடவர் கலைக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி சென்னை பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கார் அரசினர் கலைக் கல்லூரி, தியாகராயா கலைக்கல்லூரி, மீனம்பாக்கம் ஏஎம் ஜெயின் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேவேளை அனைத்து மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று மத்திய புகையிரத நிலையத்தை முற்றுகையிட்டு புகையிரத மறியலில் ஈடுபட முயன்ற நிலையில் அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 22 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் சென்னை மருத்துவக் கல்லூரி வளாகத்தில ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் அனிதாவுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரியில் இந்திய மாணவர் சங்கம், மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட 20 அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ராஜீவ்காந்தி சதுக்கம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.