காணமல்போனோர் சங்கங்களின் பிரதிநிதிகள் இன்றையதினம் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.; இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்; 6000 க்கும் மேற்பட்டோர் வலிந்து காணாமலாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இன்று நண்பகல் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே இது தொடர்பில் ஜனாதிபதின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக மட்டக்களப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் செயற்பாட்டாளரான எஸ். அரியமலர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் போர்ச்சூழல் காணப்பட்ட காலங்களில் இடம்பெற்ற இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைகள் , மனித உரிமை மீறல்கள், மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இடம்பெற்ற மனிதப் படுகொலைகள் பற்றி எடுத்துக் கூறியதாக அரியமலர் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரதிநிதிகளையும் ஆர்வலர்களையும் சந்திப்பதற்கு ஜனாதிபதி ஏற்கெனவே இணக்கம் தெரிவித்திருந்ததன் அடிப்படையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி உள்ளிட்ட பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.