குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காரைநகரில் நீதிமன்ற உத்தரவில் முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மூதாட்டியின் வீடு இன்று மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன் அந்த பெண்மணி இன்று மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார்.
காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற பெண்மணி பணத் தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் அறுதி உறுதி எழுதி ஈடு வைத்தார். சுமார் மூன்று இலட்சம் ரூபாவிற்கு ஈடு வைக்கப்பட்டது.
உரிய காலத்தில் அந்த வீட்டை மீட்க முடியாத காரணத்தால் ஈடு பிடித்தவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையினல் அந்த வீடு ஈடு பிடித்தவர்களுக்குச் சொந்தமானது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மூதாட்டியின் வீட்டுக்கு பொலிஸார் சகிதம் வந்த நீதிமன்றப் பணியாளர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே, வீதியில் தூக்கி வைத்துவிட்டு அந்தப் பெண்மணியையும் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தனர்.
‘அவர்கள் வரும்போது பானையில் சோறு அவிந்துகொண்டிருந்தது. அந்தப் பானையை அப்படியே தூக்கி வெளியே வைத்தனர்’ என மூதாட்டி அழுதவாறு கருத்து வெளியிட்டிருந்தார்.
மூதாட்டியின் நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களும் இணைய, அச்சு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டதன் அடிப்படையில் அவருக்கு உதவுவதற்கு பல தரப்பினரும் முன்வந்தனர்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக மேஜர் இளமகள் என்ற மாவீரரைத் தந்த தாய் என்ற அடிப்படையில் அவர் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. இந்நிலையில், அவரது ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ளவர்கள் சிலர் தாங்களாக முன்வந்து பணத்தை திரட்டி அனுப்பியதன் பயனாக ஈடு பிடித்தவர்களுக்கு 5 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி அந்த வீடு மீண்டும் பெறப்பட்டு மூதாட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது.