146
எல்லோரும் மதிக்கின்ற கௌதம புத்தரை எல்லைக் கற்களாக மாற்றுவது மிக மோசமான செயற்பாடாகும். அமைதியாக இருக்கின்ற சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் புத்தர் சிலைகளை நிறுவி, அதை பெரும்பான்மையினரின் எல்லைப் பிரதேசமாக மாற்றுகின்ற முயற்சியை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அம்பாறை மத்தியமுகாம் 4ஆம், 5ஆம் கொளனி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை (05) அமீர் அலி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,
முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாள் தினத்தில் மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைப்பதற்கு சில பேரினவாத சக்திகள் எடுத்துள்ள முயற்சியானது வலிந்து வம்புக்கு இழுப்பதாகும். ஆட்களே இல்லாத மாணிக்கமடுவில் ஏதற்கு புத்தர் சிலைகளை வைக்கவேண்டும்.
முஸ்லிம்களை ஆத்திரப்படுத்தி, அவர்களை சண்டையிடவைத்து கலவரத்தை உருவாக்கி எல்லாப் பிரச்சினைகளையும் முஸ்லிம்களின் தலையில் போடும் நோக்கில்தான் இந்த முஸ்தீபு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்விடயத்தில் சிறுபான்மை சமூகம் மிகவும் அவதானத்துடன் இருக்கவேண்டும்.
பள்ளிவாசல்கள் உடைக்கப்படும்போது கையை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்த காக்கிச்சட்டைக்காரர்கள், மாணிக்கமடுவில் சிலை வைக்கும்போது உற்சாகமாக பூரண அனுசரணை வழங்கிக்கொண்டிருந்தார்கள். ஆனால், அதை தடுக்கச் சென்ற முஸ்லிம்களை தடுத்திநிறுத்தினார்கள். காக்கிச்சட்டை அணிந்திருப்பவர்களின் இவ்வாறான செயற்பாடு நல்லாட்சியில் நடைபெற முடியுமா என்பது கேள்விக்கு உட்படுத்தப்படவேண்டிய விடயம்.
பொலிஸாரின் இந்த நடவடிக்கைள் குறித்து பிரதமரிடம் அதிருப்தியுடன் எடுத்துக் கூறியிருக்கிறேன். பிரதேசத்தின் பொலிஸ் அத்தியட்சர் இதற்கு பதிலளிக்க வேண்டும். பிராந்திய பொலிஸ் அத்தியட்சர் பிரதமர் முன்னிலையில் இவ்விடயம் தொடர்பில் தெளிவுபடுத்தவேண்டும். இது ஒரு சாதாரணமான விடயமல்ல. எங்களுடைய ஆட்சியில் சட்டமும் ஒழுங்கும் ஒரு சமூகத்துக்கும் மாத்திரம் உரித்தானதாக பார்க்கப்படுவதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இதை இந்த ஆட்சிக்காலத்தில் நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆட்சியாளர்கள் கற்றுக்கொண்ட பாடங்களை இந்த ஆட்சியாளர்களும் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் வரக்கூடாது. அதற்காகத்தான் இவ்விவரகாத்தை நாங்கள் பிரதமரிடம் கூறி, பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு காரசாரமாக கூறியிருக்கிறோம்.
பொலிஸாரின் அனுசரணையுடன் மாணிக்கமடுவில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. அதற்கு இந்த மண்ணிலேயே முடிவு கட்டப்படவேண்டும். இவ்விடயம் தொடர்பாக நாங்கள் அமைதியாக பேச்சுவார்த்தை நடாத்தி, குழு அமைத்து செயற்படுகின்றபோது, அது முற்றுப்பெறுவதற்கு முன்னர் வேண்டுமென்று ஹஜ் பெருநாள் தினத்தில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்ற குழப்பவாதிகளை இனிமேலும் அனுமதிக்க முடியாது.
மியன்மாரில் ஆட்சியாளர்களின் அட்டுழியத்தினால் பயங்கரமான இனப்படுகொலை நடந்துகொண்டிருக்கிறது. அதேபோன்ற அட்டூழியங்களுங்கு வழிகோலுகின்ற வகையிலான எந்த செயற்பாடுகளையும் நாங்கள் அனுதிக்கமுடியாது. நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்த தமிழர்களும், முஸ்லிம்களும் இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு அடிமைகளாக, வாய்மூடி மௌனிகளாக ஒருபோதும் இருக்கமுடியாது.
பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் நடைபெறுகின்றபோது இந்த விடயங்களை மெத்தனப்போக்குடன் இனிமேலும் பார்க்க முடியாது. எனவே, இவ்விடயத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகள் நியாயபூர்வமாக இருக்கவேண்டும். அதில் அதிகாரிகள் பக்கச்சார்பாக நடந்துகொள்ள முற்படுகின்றபோது, அவற்றை சரிசெய்கின்ற தார்மீக பொறுப்பு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கு இருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதில் எவ்வித விட்டுக்கொடுப்புமின்றி, ஆட்சியாளர்களை செய்விக்கின்ற ஒரு நிலையில் இருந்துக்கொண்டிருக்கிறோம்.
மாணிக்கமடு ஒதுக்குப்புறமாகவுள்ள தமிழ் பிரதேசம் என்று ஏனைய தமிழர்கள் இவ்விவகாரத்தை உதாசீனம் செய்யமுடியாது. இது எல்லா சிறுபான்மை மக்களின் பிரச்சினை. இதன் பின்னாலிருப்பது ஆக்கிரமிப்பு என்பது தெளிவான விடயம். நிலத்தை ஆக்கிரமிப்பதற்கான ஒரு ஆரம்ப நடவடிக்கையாகத்தான் இதை பார்க்கவேண்டும். எல்லைக்கற்களாக சிலை வைக்கின்ற அட்டுழியத்துக்கு முடிவுகட்ட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், பக்குவப்பட்ட ஒரு அரசியல்வாதி. அந்தக் கட்சிக்குள்ளும் தீவிரமாகப் பேசுகின்ற சிலர் இருக்கின்றனர். சாத்தியமானவற்றை சாதிக்கின்ற கலைதான் அரசியல். சிறுபான்மை சமூகங்களுக்கு நிரந்தர தீர்வை அடைவதற்கு நல்லதொரு வாய்ப்பு இந்த ஆட்சியை கொண்டுவந்த பின்னணியில் உருவானது. சிறுபான்மை மக்கள் வரலாறு காணாத ஆதரவை வழங்கியதினால்தான் இந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாகியுள்ளது. கடந்த அரசாங்கத்தில் நடந்தது போன்று இந்த அரசாங்கத்திலும் அநியாயங்களை நடைபெற்றால், அவற்றை கேள்விகேட்கின்ற தார்மீக உரிமை சிறுபான்மை மக்களுக்கு இருக்கிறது.
கிழக்கு மாகாணசபையில் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து ஆட்சிசெய்துகொண்டிருக்கிறோம். இதன்மூலம் தேசிய நல்லிணக்க ஆட்சியை செய்துகொண்டிருக்கிறோம் என்று பகட்டுக்கு கூறமுடியாது. உண்மையான நல்லிணக்கம் என்னவென்பதை இந்த மாகாணசபையில் நாங்கள் காட்டவேண்டும். அநியாயங்கள் நடக்கின்றபோது அப்புறம் பார்த்துக்கொள்வோம் என்று கடந்த அரசாங்கம்போல, இந்த அரசாங்கமும் கூறுவதை நாங்கள் சகித்துக்கொண்டிருக்க முடியாது.
மாகாணசபைகளுக்கு சட்டமும் ஒழுங்கும் கிடைக்கக்கூடாது என்பதில் எவ்வித நியாயமும் கிடையாது. தமிழர்களும், முஸ்லிம்களும் மாகாணசபையை கைப்பற்றி எங்களுக்குரிய காணி, பொலிஸ் அதிகாரங்களை தட்டிப்பறித்துக் கேட்கின்ற அதிகாரம் அடுத்துவரும் தேர்தலன்றி, வேறொன்றும் இருக்கமுடியாது என்று கூறினார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். மாஹிர், ரி.கலையரசன், மு.கா. தவிசாளர் அப்துல் மஜீத், நாவிதன்வெளி அமைப்பாளர் ஏ.சி. நிஸார், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்ஸார், கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
Spread the love