இந்தியா இருமுனை போருக்கு தயாராக வேண்டும் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
டோக்லாம் பிரச்சினை, 73 நாட்களாக நீடித்தது எனவும் தொடர்ந்தும் சீனா, அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது எனவும் இந்த பிரச்சினை, படிப்படியாக பெரிய மோதலுக்கு வழிவகுத்து விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாகிஸ்தான் ராணுவமும், அரசியல்வாதிகளும் நமது நாட்டை எதிரியாக பார்க்கின்றனர் எனவும் பாகிஸ்தானுடன் இணக்கத்துக்கு வாய்ப்பே இல்லாதது போன்று தோன்றுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த இரு நாடுகளுடனான மோதல், ஒரு குறிப்பிட்ட இடத்துக்குள், குறிப்பிட்ட கால அளவுக்குள் முடிந்துவிடக்கூடும் அல்லது முழு அளவிலான போராக உருவெடுக்கக்கூடும் எனத் தெரிவித்த இந்திய ராணுவத் தளபதி எனவே, இந்தியா இருமுனை போருக்கு தயாராக வேண்டும் எனவும் முப்படைகளில் ராணுவத்தின் முன்னுரிமை நீடிக்க பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.