அனிதாவுக்கு நீதி கோரி மதுரை தமுக்கம் மைதானம் மற்றும் தல்லாகுளத்தில் போராட்டம் நடத்திய 81 பேரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனிதாவுக்கு நீதி கோரியும் நீட்டை தடை செய்ய வலியுறுத்தியும் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் தமிழன்னை சிலையிடம் நீதி கேட்டு போராட்டம் மேற்கொண்டனர்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தப்பட்ட தமுக்கம் மைதானம் போர்க்களமாகிவிடக் கூடாது எனத் தெரிவித்து 60 பேரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். இதேபோல் தல்லாகுளத்திலும் போராட்டம் நடத்திய 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட 81 பேரும் மதுரை 2-வது நடுவர் நீதிமன்றில் முன்னலைப்படுத்தப்பட்ட போது 81 பேரையும் 15 நாள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை என்பதனால் மனமுடைந்த அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதா மரணம் குறித்து நீதி விசாரணை கோரி உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு இன்று விசாரணைக்கு வருகிறது.