சிறுவர்கள் தமது அன்றாட வாழ்க்கையில் எதிர்நோக்க நேர்ந்துள்ள கொடுமைகளிலிருந்து அவர்களை மீட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு சமூகத்தில் பொறுப்பு வாய்ந்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இன்று (08) முற்பகல் திகன, மத்திய மாகாண விளையாட்டு வளாகத்தில் இடம்பெற்ற ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிறுவர் சமுதாயத்தைப் பாதுகாத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குவதனை நோக்காகக் கொண்டு ஜனாதிபதியின எண்ணக்கருவிற்கமைய, ‘சிறுவர்களைப் பாதுகாப்போம்’ தேசிய செயற்திட்டம் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.
வீட்டு வன்முறைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள், குற்றச்செயல்களில் சிறுவர்களை ஈடுபடுத்தல் மற்றும் சிறுவர்களை தொழிலில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட தற்போதைய சிறுவர் சமூகம் எதிர்நோக்க நேர்ந்துள்ள கொடுமைகளிலிருந்து அவர்களை மீட்டெடுத்து, பாதுகாத்தல் இந்த செயற்திட்டத்தின் நோக்கமாகும்.
சுகாதார கல்வி, உளவியல் ஆலோசனைகள் மற்றும் சட்ட ஆலோசனைகள் உள்ளிட்ட பல துறைகளின் ஊடாக சிறுவர்களை வலுவூட்டுவதற்கு இச்செயற்திட்டத்தின் மூலமாக எதிர்பார்க்கப்படுகின்றது. மூன்று வருட காலத்திற்குள் இச்செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் மாகாண, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பல்வேறு செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி , இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் சமூகத்தின் அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
அண்மையில் நிகழ்ந்த மாணவி வித்தியாவின் கொடூரமான கொலைச் சம்பவம் உள்ளிட்ட சிறுவர்கள் எதிர்நோக்கிய பல கசப்பான அனுபவங்களையும் இதன்போது நினைவுகூர்ந்த ஜனாதிபதி , பாடசாலைகள், வெளியிடங்கள் மற்றும் வீடுகளில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்த விரிவான வேலைத்திட்டமொன்று அவசியமாகும் என்றும் தெரிவித்தார்.