வடமாகாண முதலைமச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று கண்டி மல்வத்த மகாநாயக்க திப்பொட்டுவாவே தேரரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரையும் வடமாகாண சபையையும் இனவாதிகள் என்ற நோக்கில், தென்பகுதியைச் சேர்ந்த மக்களும் பௌத்த மகாநாயக்கர்களும் நோக்குகின்ற நிலையில் இந்தச் சந்திப்புகள் இடம்பெறுகின்றன.
மல்வத்த மகாநாயக்கருடாதன நேற்றைய சந்திப்பில் முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களான கந்தையா சிவநேசன், அனந்தி சசிதரன் ஆகியோரும் தமிழ் மக்கள் பேரவையைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச் சந்திப்பின்போது, தான் ஒரு இனவாதியல்ல என்பதை மல்வத்த மகாநாயக்கருக்கு, வடமாகாண முதலமைச்சர் எடுத்துரைத்ததுடன், தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ் மக்களுடைய அன்றாடப் பிரச்சனைகளுக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் முதலமைச்சர் மல்வத்த மகாநாயக்கருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தச் சந்திப்பில் கலந்து கொண்ட பெண்கள் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், யுத்தம் காரணமாகவே வடக்கிலும் கிழக்கிலும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் விதவைகளாகவும், வலிந்து ஆட்கள் காணாமல் ஆக்கப்பட்டதனால், பெண்கள் குடும்பங்களுக்குத் தலைமைதாங்க வேண்டிய அவல நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் எடுத்துரைத்துள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் மறுவாழ்வுக்காக சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இருப்பதையும் அவர் மல்வத்த மகாநாயக்கரிடம் வலியுறுத்தியுள்ளார்.
தனது மூன்று பிள்ளைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருந்த அமைச்சர் அனந்தி சசிதரன், தனது கணவர் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போயிருப்பதாகவும், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து தனது பிள்ளைகள் தினமும் தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாதிருப்பதாகவும் கூறினார்.
இதேவேளை முதலமைச்சர் குழுவினர் இன்று ஞாயிற்றுக்கிழமை அஸ்கிரிய பீடாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மஹாநாயக்க தேரருக்கு சீ.வி விக்னேஸ்வரன் விளக்கம்
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரனுக்கும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரருக்கும் இடையில் இன்று காலை சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது பல முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் வட மாகாணம் சம்பந்தமாக தெற்கு மக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாகவும் இது குறித்து மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் மஹாநாயக்க தேரருக்கு தெளிப்படுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.