குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுச பெல்பிட்ட ஆகியோர் தண்டிக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே பொறுப்பு சொல்ல வேண்டுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
வீரதுங்க மற்றும் பெல்பிட்ட ஆகியோர் கள்வர்கள் அல்ல எனவும் அரசியல் ரீதியான தீர்மானங்களை அமுல்படுத்தியமையே அவர்கள் செய்த தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 620 மில்லியன் அரசாங்கப் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தி இருவருக்கும் மூன்றாண்டு கால கடூழிய சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கான பொறுப்பினை மஹிந்த ராஜபக்ஸ ஏற்றுக்கொண்டிருந்தால் வீரதுங்கவும், பெல்பிட்டவும் தண்டனை அனுபவித்திருக்க நேரிட்டிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.