கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கமானது “செப்ரெம்பர் செஸ்” (September Chess ) எனும் பெயரில் இந்த மாதத்தில் கிளிநொச்சி மாவட்டம் தழுவிய ரீதியில் 300 வரையான மாணவர்களுக்கு சதுரங்கம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் , அடிப்படைப் பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளது.
இச்செயற்பாடானது கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகத்தின் ஆதரவுடன் “வேள்ட் விசன்” (World vision) நிறுவன அனுசரணையுடன் கடந்த 7ம் திகதி கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்திலும் 8ம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் அ.த.க.பாடசாலையிலும் 9ம் திகதி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் தலா 100 மாணவர்கள் வீதம் 300 மாணவர்களுக்கு சதுரங்கம் தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளையும் , அடிப்படைப் பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சதுரங்கத்தினை கிராம மட்டங்களுக்கு விஸ்தரிக்கப்படமுடியும் என ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இச்செயற்பாடுகளில் வளவாளர்களாக கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தின் தலைவர் தி.சிவரூபன் , சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் பொறியியலாளர் வி.விஜிதரன் , சங்கத்தின் உறுப்பனர்களான எஸ்.கயூரன், சு.நிரோஜன் , சு.கிருஷாந் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.
செப்ரம்பர் செஸ் இன் ஆரம்ப நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தரும் சங்கத்தின் ஆலோசகருமான எஸ்.மோகனதாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இச்செப்ரெம்பர் செஸ் செயற்பாடானது தொடர்ந்தும் இம் மாதம் முழுவதும் முன்னெடுக்கப்படுவதுடன் ஒவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் முன்னெடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் தி.சிவரூபன் தெரிவித்தார்.