குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியாவிலுள்ள ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் சொத்துக்களை வாங்குவது, வாடகைக்கு எடுப்பது, வேலைவாய்ப்பை பெறுவது உட்பட பலவிடயங்களில் தடைகளையும் ,பாரபட்சத்தையும் எதிர்நோக்குகின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் அதிகளவில் வெளியாகிவருவதை தொடர்ந்து அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
பிரித்தானிய அரசாங்கத்தின் சமத்துவ விவகாரங்களிற்கான அமைச்சர் நிக் கிப் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளிற்கு எதிரான அதிகளவு ஓடுக்குமுறைகள் குறித்த தகவல்களை அரசாங்கம் அறிந்துள்ளது எனவும் அது குறித்து ஆராய்ந்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்கட்சியின் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து விலகும் விவகாரத்திற்கான நிழல் அமைச்சர் போல்புளொம்பீல்ட் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளிற்கு எதிரான பாரபட்சம் குறித்த ஆதாரங்கள் அடங்கிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதை தொடர்ந்தே அரசாங்கம் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வேலைவாய்ப்பு விளம்பரங்கள் , சொத்துக்களை விற்பது வாடகைக்கு விடுவது போன்ற விளம்பரங்களி;ல் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டிருப்பதை காண்பிக்கும் ஆதாரங்களை அவர் சமர்ப்பித்துள்ளார். பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளிற்கு ஆதரவான பிரச்சார குழுவொன்று இந்த ஆதாரங்களை திரட்டியுள்ளது.
இந்த ஆதாரங்களை அமைச்சரிடம் சமர்ப்பித்துள்ள புளொம்பீல்ட் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் பாரபட்சத்தை அனுபவிப்பது குறித்து தான் ஆழ்ந்த கவலையைடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கைகள் ஓரு எச்சரிக்கை என்பதை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் எனகருதுகிறேன் இவை வர்த்தகதுறையினர் மத்தியில் காணப்படும் நிச்சமற்ற நிலையையும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் எதிர்நோக்கும் பாரபட்சங்களையும் வெளிப்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.