குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தின் பலவீனம் காரணமாகவே யுத்தக் குற்றச் செயல் குறித்த குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கம் வழங்கி வரும் உத்தேவகத்தின் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன், இலங்கை மீது தொடர்ந்தும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகம் சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்காது தற்போதைய அரசாங்கம் அந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ளும் வகையில் கருத்து வெளியிட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தியமை பாரதூரமானது என அவர் தெரிவித்துள்ளார்.
படைவீரர்களை சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் நிறுத்தப் போவதில்லை என ஜனாதிபதி ஊடகங்களில் கூறிய போதிலும் உண்மையில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வேறுவிதமாகவே காணப்படுகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.