172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்ற சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இருந்த 5 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட்டு உள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் சந்தேக நபர்களுக்கு பிணை கோரி விண்ணப்பம் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது சந்தேக நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி , கடந்த 11 மாத காலமாக விளக்கமறியலில் சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமையை சுட்டிக்காட்டி ,தகுந்த நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்கப்பட வேண்டும் என மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.
கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணை வழங்குவதற்கு தமக்கு ஆட்சேபனை இல்லை என அரச சட்டவாதி மன்றில் தெரிவித்ததை அடுத்து மன்றினால் பிணை வழங்கப்பட்டது. குறித்த சந்தேக நபர்கள் ஐவரும் தலா இரண்டு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையிலும் , தலா 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசு பிணையிலும் , செல்ல மன்றினால் அனுமதிக்கப்பட்டனர்.
அத்துடன் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 09 மணி முதல் மதியம் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கொழும்பு குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று கையொப்பம் இட வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை , கடவுசீட்டை நீதவான் நீதிமன்ற பதிவாளரிடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பின்னணி.
யாழ்.குளப்பிட்டி சந்திக்கு அருகில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் மீது யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிசார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் , இரு மாணவர்களும் படுகொலை செய்யபட்டனர்.
யாழ்.பல்கலைகழக அரசறிவியல் துறை மாணவனான கிளிநொச்சியை சேர்ந்த நடராஜா கஜன் (வயது 23), மற்றும் ஊடகத்துறை மாணவனான சுன்னாகத்தை சேர்ந்த விஜயகுமார் சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்களுமே துப்பாக்கி பிரயோகத்தில் படுகொலை செய்யப்பட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தை சேர்ந்த உப பொலிஸ்பரிசோதகர் சரத்திஸ்ஸ என்பவர் தலைமையிலான , ஜெயவர்த்தன, சந்தன, லங்காமல், நவரத்தின ஆகிய ஐந்து பொலிசார் கைது செய்யபட்டு யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தபட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர்.
Spread the love