வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வீதி அபிவிருத்தியின் கீழ் வட மாகாண அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப்பணிகளுக்கான திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான கடனுதவியை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளடிதன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்திலிருந்து இலகுவாக கொழும்புக்கு வந்து சேரக்கூடியவகையில் அதிவேக நெடுஞ்சாலை அல்லது உயர்தரத்துடன்கூடிய நெடுஞ்சாலையை நிர்மாணிப்பது குறித்தும் திட்டமொன்றை விரைவாக தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வீதி அபிவிருத்தி மற்றும் மேம்பாலங்கள் திட்டத்திற்காக தேசிய மற்றும் வெளிநாட்டு ஏற்பாடுகள் கிடைக்கும் முறை தொடர்பாக வினவிய ஜனாதிபதி, அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகள் காரணமாக காணிகளை இழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும் ஆலோசனை வழங்கினார்.