முல்லைத்தீவு துணுக்காய் பழையமுறிகண்டிக் கிராமத்தில் கடந்த ஏழாண்டுகளாக தொடரும் மணல் அகழ்வினைத் தடுப்பதில் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் தவறிவிட்டதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பழையமுறிகண்டி ஆற்றுப்படுகைகளில் தொடர்கின்ற மணல் அகழ்வினால் பழையமுறிகண்டிக் குளத்தின் அணைக்கட்டிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பெருமளவு காடுகள் அழிக்கப்பட்டே மணல் அகழ்வு தொடர்வதாகவும் வடமாகாண முதலமைச்சர், விவசாய அமைச்சர், மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், துணுக்காய் பிரதேச செயலாளர் ஆகியோருக்கு தொடரும் மணல் அகழ்வு தொடர்பாக தகவல்கள் வழங்கியும் மணல் அகழ்வு தொடர்வதாகவும்
அகழ்ந்து எடுக்கப்படும் மணல் புத்துவெட்டுவான் கொக்காவில் வழியாக கடந்த ஏழாண்டுகளாக கொண்டு செல்லப்படுவதாகவும் இந்த ஏழாண்டு காலத்தில் மணல் அகழ்வினைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களோ அதிகாரிகளோ கிராமத்திற்கு வருகை தரவில்லை எனத் தெரிவிக்கும் கிராம மக்கள்
வடமாகாண முதலமைச்சருக்குக் கூட நேரிலும் மனுமூலமும் தகவல் தெரிவிக்கப்பட்டும் வடமாகாண சபை கூட பழையமுறிகண்டிக் கிராமத்தில் தொடரும் மணல் அகழ்வினைத் தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கிராம மக்களினால் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சூழல் சட்ட அமுலாக்கல் குழுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் பழையமுறிகண்டி, புத்துவெட்டுவான் பகுதிகளில் நடைபெறுகின்ற மணல் அகழ்வுகளுக்கு அனுராதபுரம் போன்ற பகுதிகளில் பெறப்படுகின்ற அனுமதிகளே முறைகேடாக பயன்படுத்தப்படுவதாகவும் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.