ஜப்பானின் வடக்கு பகுதிக்கு மேல் வட கொரியா மீண்டும் ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வானில் ஏவியுள்ளதாக ஜப்பான் மற்றும் தென் கொரிய அரசுகள் தெரிவித்துள்ளன.
அந்த ஏவுகணை சுமார் 770 கிலோ மீட்டர் உயரத்தை அடைந்திருக்கலாம் என்றும், 3,700 கிலோ மீட்டர் தூரம் பயணித்திருக்கலாம் என்றும் தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
பசுபிக் பெருங்கடலில் சென்று விழுவதற்கு முன்பு, அந்த ஏவுகணை ஜப்பானின் ஹொக்கைடோ தீவுக்கு மேல் உள்ள வான்வெளியில் பறந்துள்ளது. இந்த ஏவுகணை உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கும் சற்று முன்னதாக ஏவப்பட்டதாக தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 29 அன்று ஏவப்பட்ட ஏவுகணையை விட, இந்த ஏவுகணை அதிக உயரத்தில் பறந்ததுடன் மட்டுமல்லாது அதிக தூரமும் பயணித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இந்த சோதனை, ஜப்பானைத் தூண்டும் வகையில் அமைந்துள்ள பொறுத்துக்கொள்ள முடியாத நிகழ்வு என ஜப்பான் அமைச்சரவையின் தலைமைச் செயலாளர் யோஷிஹிடே சுகா கூறியுள்ளார்.
அதேவேளை அமெரிக்கா மற்றும் ஜப்பானின் வேண்டுகோளை ஏற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று, வெள்ளிக்கிழமை, அவசரமாக கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் ஐக்கிய நாடுகளின் கடும் எச்சரிக்கையும் மீறி ஜப்பானை நோக்கி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஜப்பான் அரசு எச்சரித்துள்ளது.