குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய பாடசாலைகளில் ஒன்றான முழங்காவில் மகா வித்தியாலயத்தில் பதினைந்து வகுப்புகளுக்கு மேற்பட்ட வகுப்பறைகள் தேவையாக உள்ளதாக பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது. 802 மாணவர்கள் கல்வி பயிலும் இப்பாடசாலையில் 2009ஆம் ஆண்டின் பின்னர் சில கட்டடங்கள் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை மாணவர்களின் வகுப்பறைகளாக உருவாக்கப்படவில்லை. பழைய கட்டடங்களிலேயே மாணவர்கள் கல்வி பயில்கின்ற நிலைமை காணப்படுகின்றது எனத் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பாடசாலையில் ஒன்று கூடல் மண்டபம் இல்லை எனவும் சிற்றூழியர்கள் ஒருவர் கூட பணியில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள் பெயரளவில் மட்டும் தேசியப் பாடசாலை என்று சொல்லிக் கொள்வதினால் மாணவர்களுக்கு நன்மை கிடைப்பதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் வளங்களைப் பெருக்க வேண்டும் எனவும் அப்போதுதான் மாணவர்கள் சிறந்த கற்றலில் மகிழ்ச்சிகரமாக ஈடுபட முடியும் என்பதுடன் ஒரு தேசியப் பாடசாலைகளுக்குரிய எந்தவிதமான கட்டுமானங்களும் பாடசாலையில் இல்லாததன் காரணமாக மாணவர்கள் நகரங்களை நோக்கி செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது.
எனவே கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள முக்கிய பாடசாலையான முழங்காவில் மகா வித்தியாலயத்தின் வளங்களைப் பெருக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளன.