குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் முதல் சில வருடங்களில்10,000 நிதி சார்ந்த வேலைகளை இழக்கவேண்டியிருக்கும் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. பிரித்தானியா வெளியேறிய அடுத்த சில வருடங்களில் 10000 நிதித்துறை சார்ந்தவேலைகள் பிரித்தானியாவுக்கு வெளியே உள்ள நாடுகளிற்கு செல்லும் என ரொய்ட்டர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தி சேவை தெரிவித்துள்ளது.
பிராங்பேர்ட் நகரே பலரின் விருப்பமாகவுள்ளது எனவும் அதற்கு அடுத்தபடியாக பாரிஸ் காணப்படுகின்றது எனவும் ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. பிரித்தானியா வெளியேறிய பின்னர் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்போகின்றீர்கள் என வங்கிகள் உட்பட நிதித்துறை சார்ந்த நிறுவனங்களிடம் ரொய்ட்டர் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள நிறுவனங்களி;ல் பெரும்பாலானவை பிரித்தானியா வெளியேறிய பின்னர் தாங்கள் தங்கள் பணியாளர்களை வேறு இடங்களிற்கு மாற்றவேண்டியிருக்கும் எனவும் அனைத்தையும் மீள வடிவமைக்க வேண்டியிருக்கும் எனவும் தெரிவித்துள்ளன.
இதேவேளை சில நிறுவனங்கள் பாதிப்பு எதுவும் ஏற்படாது என தெரிவித்துள்ள அதேவேளை இன்னும் சில நிறுவனங்கள் இன்னமும் இது குறித்து தாங்கள் முடிவெடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரும் சிறிது காலத்திற்கு பிரித்தானியா ஐரோப்பாவின் மிக முக்கிய நிதி மையமாக விளங்கும் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.
எனினும் ஓரு தசாப்தத்திற்கு பின்னரே பாரிய மாற்றங்கள் ஏற்படலாம் என நிறுவனங்கள் தெரிவித்துள்ளன பிரித்தானியா வெளியேறியவுடன் உடனடியாக இவை இடம்பெறாது எனவும் சிறிதுசிறிதாக லண்டனிலிருந்து தொழில்கள் வெளியே செல்லும் எனவும் நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.