குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புத்தூர் கலைமதி இந்து சிட்டி மாயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு யாழ்.மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்து உள்ளது. புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
உள்ளுராட்சி அமைச்சராக வடமாகாண முதலமைச்சரே உள்ள நிலையில் அவரது அமைச்சுடனும் இது தொடர்பாக தொடர்புகொண்டு அறிக்கைகள் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். யாழ்.மாவட்ட அரச அதிபருடைய பங்களிப்புக்கள் இதில் எவ்வாறு உள்ளனஇ அவரால் வழங்கப்படக்கூடிய தகவல்கள் தொடர்பாகவும் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் மயானத்தை சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை அது பாதிக்குமாயின் அது நிரந்தரமாக கைவிடப்பட வேண்டுமா என்பது தொடர்பான தகவல்கள் அனைத்தும் மன்றுக்கு அரச சட்டவாதியால் சமர்பிக்கப்பட வேண்டும். இந்த மக்கள் கடந்த 68 நாட்களாக போராடி வருகின்றார்கள். நீதி என்பது அனைவருக்கும் சமனானது. அது பாதிக்கப்பட்ட எந்த தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டியது.
அத்துடன் நீதிகோரி வீதியிலே நின்று போராடும் போது அதனை பார்த்துக்கொண்டு நீதி தேவதை கண்களை மூடிக்கொண்டு இருந்துவிடவும் முடியாது. அவ் போராட்டத்திற்கு முடிவு முற்றுமுழுதாக உடனடியாக வழங்கப்பட முடியாவிட்டாலும், இடைக்கால முடிவேனும் வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையிலேயே இவ் கட்டளையானது பிறப்பிக்கபபடுகின்றது.
அதன்படி மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்குஇ யாழ்.மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ் வழக்கானது முடிவுறுத்டப்படும் வரையில் மேல் நீதிமன்றானது இடைக்கால தடை உத்தரவு விதிக்கின்றது.
அதேபோன்று இவ் வழக்கு தொடர்பாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் காணப்படும் மூல வழக்கேடானது யாழ்.மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்பட வேண்டும். இவற்றைவிட மல்லாகம் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த மயானத்தை சுற்றி கட்டப்படும் மதில்கள் கட்டுமானங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டயதுடன் இவ் வழக்கு முடியும் வரை அவை அமைக்கப்பட கூடாது எனவும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனவே நிர்வாக ரீதியான நடவடிக்கைள் மேற்கொள்வதற்கு நீதிமன்றில் உள்ள தடை உத்தரவு காரணமென கூறப்பட்ட நிலையில் தற்போது அதனை நிவர்த்தி செய்யும் வகையில் அவ் உத்தரவுகளுக்கு தடை உத்தரவானது வழங்கப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்தார்.
மேலும் இவ் தடை உத்தரவு தொடர்பான பிரதிகளை வடக்குமாகாண முதலமைச்சர், வடக்குமாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரச அதிபர் ஆகியோருக்கு அணுப்பி வைக்க பதிவாளருக்கும், குறித்த தரப்பினர் அம் மயானம் காணப்பட வேண்டிய அல்லது அது நீக்கப்பட வேண்டிய காரணங்கள் தொடர்பாக அரச சட்டவாதிக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உத்தரவிட்டார்.