இந்தியாவின் மராட்டிய மாநிலம் மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடு விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் பல விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன. மும்பையில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகின்றமையினால் வீதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதனால் புகையிரதம் மற்றும் பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. மேற்கு மற்றும் மததிய பகுதிகளில் சில புகையிரத போக்குவரத்துகளும் இதனால் நிறுத்தப்பட்டுள்ளன. . மேலும் சில புகையிரதங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. பிரதான ஓடுதளம் மூடப்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளிநாடு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கோவா, பெங்களூர், டெல்லி, ஐதராபாத்துக்கு விமானங்கள் திருப்பி விடப்பட்டன. மேலும், 56 விமானங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
மும்பையில் பெய்து வரும் பலத்த மழையால் மும்பைக்கு செல்ல வேண்டிய 10க்கு மேற்பட்ட விமானங்கள் சென்னையில் தரையிறக்கப்பட்டன. இதற்கிடையே, கனமழை காரணமாக டப்பாவாலாக்கள் இன்று தங்களது சேவையை நிறுத்தியுள்ளனர் என மும்பை டப்பாவாலா சங்கத்தின் சுபாஷ் தலேகர் தெரிவித்துள்ளார்.