குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் சிறைச்சாலை கைதிகளுக்கு போதை பொருள் கடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து காணப்படுகின்றது. யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதியாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் இளைஞர் ஒருவருக்கு அவரது சகோதரர் ஆடைகளுக்குள் மறைத்து ஹொரோயின் போதை பொருளை கொடுக்க முற்பட்ட வேளை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் கைது செய்யப்பட்டார்.
கடந்த திங்கட்கிழமை சிறையில் உள்ள தனது சகோதரரை பார்ப்பர்ப்பதற்காகவும் அவருக்கு தேவையான ஆடைகளை வழங்க எனவும் , ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். அவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சிறைச்சாலை உத்தியோகர்தர்கள் , அவர் கொண்டு சென்ற ஆடைகளை பரிசோதித்த வேளை அதனுள் மிகவும் சூட்சுமமான முறையில் போதை பொருள் சிறு சிறு பொதிகளாக மறைக்க வைக்கப்பட்டு இருந்த நிலையில் கைப்பற்றினார்கள்.
அதனை அடுத்து குறித்த இளைஞரையும் கைப்பற்றப்பட்ட போதை பொருளினையும் யாழ். காவல்நியைத்தில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கையளித்தனர்.
அதனை அடுத்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை , போதை பொருள் கடத்திய சந்தேக நபரை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிவான் எஸ். சதிஸ்தரன் முன்னிலையில் முற்படுத்திய காவல்துறையினர் அவரிடம் இருந்து 170 கிராம் ஹொரோயின் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர். அதனை அடுத்து சந்தேக நபரை எதிர்வரும் 3ஆம் திகதிவரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறைக்கைதி ஒருவரை பார்க்க சென்ற பெண் ஒருவர் பிட்டுக்குள் கஞ்சா போதை பொருளை கடத்த முற்பட்ட போது கைது செய்யப்பட்டார். அதேபோன்று கடந்த 12ஆம் திகதி குடும்ப தலைவர் ஒருவர் கோழி குழம்பினுள் ஹொரோயின் போதை பொருளை கடத்த முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டார்.
இவ்வாறாக கடந்த சில வாரங்களினுள் யாழ்.சிறைச்சாலைக்குள் போதை பொருள் கடத்த முற்பட்ட மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.