யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வருடத்திற்கு 500பேருக்கும் அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாகவும் இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி, இறந்து வருவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் பின்னரே தற்கொலைக்கு முயல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை வைத்தியசாலை புள்ளி விபரங்களிலிருந்து தெரிய வருகின்றது எனவும் இது தொடர்பில் உளவியல் ரீதியிலான ஆற்றுப்படுத்தல் பணிகளை ஒரு விஷேட ஏற்பாடாக வடக்கு மாகாணத்தில் விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா எனவும் அவர் எழுப்பியுள்ளார்.
யுத்தத்தின் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்த மக்கள் உளவியல் பிரச்சினைகளுக்கும், கடன் தொல்லைகளுக்கும், வறுமைக்கும் முகம் கொடுக்க முடியாது தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துவருவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று(21) சமூக சேவைகள், சமூக வலுவூட்டல் மற்றும் மலையக மரபுரிமைகள் அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கவிடம் கேள்விகளை முன்வைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தற்கொலை முயற்சிகளுக்கான பிரதான காரணி உளவியல் பிரச்சினைகள் என்றே மருத்துவ நிபுணர்களால் கண்டறியப்பட்டுள்ள நிலையில், குடும்ப வறுமை மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளும் இதில் முக்கிய பங்கினை வகிப்பதாகத் தெரிய வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.