மியான்மரில் ரோஹிங்கிய இஸ்லாமியர்கள் இனப் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்களான தமின்முன் அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான தமிமுன் அன்சாரி, எல்லையில் தவிக்கும் 40 ஆயிரம் ரோஹிங்கிய இஸ்லாமியர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய தனியரசு, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை கொண்டு வர கூடாது என வலியுறுத்தினார். தமிழக அரசு மறைமுகமாக பாஜகவின் கொள்கையை பின்பற்றுவதை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதே போல், மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை வடக்கு மாவட்டத் தலைவர் நவ்ஷாத் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மியான்மர் அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.