குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை சேவையில் இணைந்து கொள்ள தமிழர்கள் நாட்டம் காட்டுவதில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். காவல்துறை திணைக்களத்தில் இணைந்து கொள்வது தொடர்பில் தமிழர்களின் ஆர்வம் மிகவும் குறைந்தளவில் காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
7000 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் இதில் பத்து வீதமான தமிழர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், 180 தமிழர்களே காவல்துறை சேவையில் இணைந்து கொள்வதற்காக விண்ணப்பம் செய்துள்ளனர் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த விடயம் குறித்து வட மாகாண ஆளுனர், சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.