119 இடங்களை கொண்டுள்ள நியூசிலாந்து நாட்டின் பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தலில் எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆட்சி அமைப்பதற்கு 61 இடங்கள் தேவை என்ற நிலையில், 3 முறை அரசு அமைத்த தேசியக்கட்சி 58 இடங்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது.
இந்த தேர்தலில், கலாநிதி பரம்ஜீத் பார்மர், பிரியங்கா ராதாகிருஷ்ணன் ஆகிய 2 பெண்கள் உள்பட 3 இந்தியர்கள் வெற்றி பெற்று, நியூசிலாந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மற்றொரு இந்தியர் கன்வல்ஜீத் சிங் பாக்சி ஆவார். இவர் தொடர்ந்து 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
கலாநிதி பரம்ஜீத் பார்மர் 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
38 வயதுடைய பிரியங்கா ராதாகிருஷ்ணன், தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். இந்தக் கட்சி 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் கூட்டணிக் கட்சியான பசுமைக்கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கன்வல்ஜீத் சிங் பாக்சி, டெல்லியில் பிறந்தவர். பிரியங்கா ராதாகிருஷ்ணன், கேரள மாநிலம், பரவூரை சேர்ந்தவர்.