குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசி எடுக்கப்பட்ட தீர்வுகளினடிப்படையில் ஐநா மனித உரிமை பேரவையின் தீர்மானத்திற்கமைய அரசு அழுத்தத்திற்கு உள்ளாகி அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
வலி வடக்கு பிரதேசம் தந்தை செல்வா, அமிர்தலிங்கம் தலைமைதாங்கிய தொகுதி முழுமையாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில் தாம் எடுத்த முயற்சியில் முன்னேற்றம் கண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். 90 ஆயிரத்திற்கு அதிகமான பெண்தலைமை்ததுவ குடும்பங்களும், உணவு ஊட்டச்சத்து குறைவான குழந்தைகள் அதிகளவில் காணப்படுகின்றன எனவும் அதற்காக பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் போராளிகள், அங்கவீனர்கள் உள்ளிட்டவர்களின் வாழ்வாதாரத்திற்காக இங்கேயே வேலை வாய்ப்புக்களை வழங்க திட்டமிட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார், கிளிநொச்சிதிருநகர் பகுதியில் அப்பள உற்பத்தி நிலையம் ஒன்று இன்று பாராளுமன்ற உறுப்பினர் சேனாதிராஜாவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி திருநகர் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குறித்த அப்பள உற்பத்தி தொழிற்சாலை திறக்கும் நிகழ்வில் சேனாதிராஜா, சிறிதரன் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.