யாழ் மயிலிட்டி பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து விமானங்களை தாக்கும் 5700 வெடிகுண்டுகள் அடங்கிய 67 பெட்டிகள் நேற்றையதினம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிணற்றை சுத்தப்படுத்தும் போது குறித்த பெட்டிகள் காணப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கிணற்றில் இருந்து அவை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பிரதேச காணிகள் மக்கள் பயன்பாட்டிற்காக அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பலாலி விமானப்படை முகாமிற்கு அருகில் உள்ள மயிலிட்டி பிரதேசத்திற்கு, யுத்த காலத்தில் பலாலியில் இருந்து செல்லும் விமானங்களை தாக்கி அழிக்கும் நோக்கில் விடுதலைப் புலிகளால் இவை எடுத்து வரப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவின் கீழ் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவிடம் ஒப்படைக்க உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.