காணாமல்போன 70 ஆயிரம் குழந்தைகள் இந்திய மத்திய அரசின் ‘ஸ்மைல்’ திட்டத்தால் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
குழந்தைப்பருவம் என்பது கடவுள் அளித்த மிகச்சிறந்த பரிசைப் போன்றது. ஆனால், குழந்தை தொழிலாளர்கள் என்ற சிறைக்குள் பிடிபடும் குழந்தைகள் இந்த அழகிய பரிசை இழக்க நேரிடுகிறது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை குழந்தை தொழிலாளர் முறை இல்லாத நாடாக உருவாக்குவோம் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
வீட்டைவிட்டு வெளியேறும் குழந்தைகள் மற்றும் கொத்தடிமைகளாக வேலை செய்யவும், பிச்சை எடுப்பதற்காகவும் கடத்தப்படும் குழந்தைகளை கண்டுபிடித்து அவர்களை உரியவர்களிடம் சேர்ப்பிப்பதற்காகவே ‘ஸ்மைல்’ என்ற திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.