குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலியாவின் மனஸ்தீவு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அகதிகளில் 25 பேரை அதிகாரிகள் அமெரிக்காவில் மீள்குடியேறுவதற்காக அழைத்துச்சென்றுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை காலை இவர்கள் போர்ட் மொரெஸ்பையிலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளனர். பப்புவா நியு கினியில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பொதுமக்கள் விவகார அதிகாரி பெவெர்லி தக்கர் இதனை உறுதிசெய்துள்ளார்.
முதல் தொகுதி அகதிகள் அழைத்துச்செல்லப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ள அவர் எதிர்வரும் வாரங்களில் மேலும் 25 பேரை அமெரிக்கா அழைத்துச் செல்லவுள்ளோம் என தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்காவில் 54 அகதிகளை மீள்குடியேற்றுவதற்கான அனுமதி கிடைத்துள்ளது எனவும் ஏனைய அகதிகளின் நிலை குறித்து ஆராய்ந்துவருகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பராக் ஓபாமாவின் ஆட்சிக்காலத்தில் அவுஸ்திரேலியாவுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையிலேயே அகதிகள் அமெரிக்காவில் மீள் குடியேற்றப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா எத்தனை அகதிகளிற்கு இடமளிக்கப்படும் என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடப்போவதில்லை அவர்கள் அமெரிக்காவில் எங்கு குடியேற்றப்படுவார்கள் என்பது குறித்தும் எந்த தகவலையும் வெளியிடாது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.